தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ரூ. 10 வரை குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை என்பது சந்தையில் இருக்கும் சூழலைப் பொறுத்து பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்கின்றன. பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த விலையைத் தினசரி மாற்றிக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த 1.4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருந்து வருகிறது. அதாவது கடந்த 2022 மே 22ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் வரவில்லை. பெட்ரோல், டீசல் விலை தலைநகர் சென்னையில் இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆக உள்ளது. அதேபோல டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 ஆகவே தொடர்கிறது. அதாவது 531ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.
பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரிகள் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அப்படி விலை குறைக்கப்படும் நிலையில், அது விலைவாசி அதிகரிப்பதையும் நிச்சயம் கட்டுப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. தீபாவளி பரிசு: வரும் 12ஆம் தேதி நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அப்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்குத் தீபாவளி பரிசாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டும் இப்படி தான் தீபாவளி சமயத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது.
இதற்கு அப்போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மீண்டும் இந்தாண்டும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசுக்கு ஏற்கனவே வருவாய் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இந்த கலால் வரி குறைப்பு நடவடிக்கை பெரும் சிரமத்தையே தரும். இதனால் இந்த வரி வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டலாம் என்பது தீவிர ஆலோசனை நடத்து வருகிறது. மாற்று வழிகள் இறுதி செய்யப்பட்ட உடன், தீபாவளிக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இஸ்ரேல் ஹமாஸ் விவகாரம் தொடங்கி பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 87.86 டாலராக இருக்கிறது. எனவே, இதையும் கருத்தில் கொண்டே மத்திய அரசு விலை குறைப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.