இராஜதந்திர ரீதியில் தாமதமாகிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம்இம்மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
புதுடில்லிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர்மட்ட அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தவிருக்கின்றனர்.
தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதியின் இந்த இந்திய விஜயம் மிக முக்கியத்துமாக அமைந்திருக்கின்றது. உள்நாட்டு மற்றும் பூகோள அரசியல் ரீதியிலும் பிராந்திய அரசியல் விவகாரங்களிலும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மிகவும் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடம் தேசியமட்ட தேர்தல் ஒன்று நடைபெறும் என்கிற சூழலிலும் மாகாண சபை தேர்தல்கள் தாமதமடைந்திருக்கின்ற நிலையிலும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மீண்டு வருகின்ற பின்னனியிலும் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.
தாமதிக்கப்பட்ட விஜயம்
கடந்த வருடம் ஜூலை மாதம் 20 ஆம் திகதியே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். இவ்வருடம் ஜூலை மாதம் 20 ஆம் திகதியே இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். அதன்படி, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்கின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பொதுவாக இலங்கையில் ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் முதலாவது விஜயமாக இந்தியாவுக்கு செல்வதே வழக்கமாக இருந்தது. எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்னதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இருதரப்பு விஜயங்களை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் மிகவும் தாமதிக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயம் இடம்பெறுகிறது.
ஒரு வருட மதிப்பீடு
ஜனாதிபதி ரணில் கடந்த வருடம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கடந்த ஒரு வருட காலமாக இந்தியா இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வந்தது என்றே கூறவேண்டும்.
அதாவது ஆரம்பத்தில் இருதரப்பு உறவு விடயத்தில் பல்வேறு விடயங்கள் செல்வாக்கு செலுத்தி இருந்தன. ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் இந்தியா இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கியிருந்தது. குறிப்பாக இந்தியா இந்த ஒரு வருட கால பகுதியிலேயே இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்வதற்கு முதலாவதாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு நிதியியல் உத்தரவாதத்தை வழங்கியது. அதன் பின்னரே ஏனைய நாடுகள் அதனை பின்பற்றி உத்தரவாதத்தை வழங்கின.
அந்தவகையில் கடந்த 12 மாதங்களில் இந்தியா பல வழிகளில் இலங்கைக்கு உதவிகளை செய்து கொண்டே வந்திருக்கின்றது. ஆனால் ஒரு வருட காலமாக ஜனாதிபதியின் இருதரப்பு விஜயம் இடம்பெறாமலே நீடித்து வந்தது.
இந்தியாவுடன் நெருங்கிய இலங்கை
மேலும் கடந்த ஒரு வருட காலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவுக்கு சார்பானதாக பல்வேறு இராஜதந்திர அணுகுமுறைகளை மேற்கொண்டிருந்தது.
கடந்த வருடம் சீனாவின் ஒரு போர் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. இது இராஜதந்திர மட்டத்தில் புதிய நிலைமைகளை தோற்றுவித்தது. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க மிகவும் இராஜதந்திரமாக செயல்பட்டு இந்தியாவின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
சர்வதேச நோக்குனர்கள் அவ்வாறே அதனை விளக்குகின்றனர். அதன் பின்னரும் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவை பல்வேறு இடங்களிலும் பாராட்டி பேசியிருந்தார். முக்கியமாக இந்தியாவும் இலங்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று ஜனாதிபதி அடிக்கடி கூறிவந்திருந்தார்.
அதுமட்டுமின்றி ஜனாதிபதி முதலாவதாக பாராளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தியோது மூச்சு விடுவதற்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியிருந்தார். இவை தொடர்பான தொடர்ச்சியான அவதானிப்புகளின் பின்னரே இந்தியா தற்போது இலங்கையுடன் நெருங்கி செயல்படுவதற்கு முன்வந்திருப்பதாக தெரிகின்றது.
மூச்சுவிட உதவி இந்தியா
2022 ஆம் ஆண்டு நெருக்கடி காலப்பகுதியில் இந்திய இலங்கைக்கு 3 தசம் எட்டு பில்லியன் கடன் உதவி வழங்கியது. தெற்காசிய நாணய பரிமாற்று ஏற்பாடுகள் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள், 500 மில்லியன் டொலர் கடன் ஒன்றை செலுத்துவதற்கான உதவி, 1.5 பில்லியன் டொலர்கள் கடனுதவி இலங்கை இந்தியாவுக்கு செலுத்த வேண்டியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடனுதவி நீடிக்கப்பட்டமை மற்றும் 500 மில்லியன் டொலர் விசேட கடன் என்பன இந்தியாவினால் 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு வழங்கப்பட்டன.
அந்த கடன் உதவியின் ஊடாகவே இலங்கையை கடந்த ஒரு வருட காலமாக எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வரையறுக்கப்பட்ட நிலையிலாவது பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. இந்தியாவின் உதவி அந்த நேரத்தில் வழங்கப்பட்டிருக்காவிடின் இலங்கையின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாகவுள்ளது. இந்த பின்னணியிலேயே தற்போது ரணில் – மோடி உறவு நெருக்கமடைந்து வருவதை காண முடிகிறது.
என்ன விடயங்கள் பேசப்படும்?
இம்முறை இந்திய விஜயமானது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாகவே அமைந்திருக்கிறது. இதன்போது பல விடயங்கள் பேசப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. வட,கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது.
அந்த அடிப்படையில் இம்முறை இந்த பேச்சுவார்த்தைகளில் 13 ஆவது திருத்த சட்ட விவகாரம், மாகாண சபை தேர்தல்கள், இலங்கையிலான இந்தியாவின் முதலீடுகள், அபிவிருத்தி திட்டங்கள், கப்பல் சேவை, கடன்மறுசீரமைப்பு விவகாரம், இலங்கை இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மீள் செலுத்துவதற்கான கால அவகாசம், தமிழ் கட்சிகளுடன் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள், இருதரப்பு மீனவர்கள் விவகாரம், சுற்றுலா பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைப்பதற்கான நகர்வுகள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இம்முறை பேச்சுவார்த்தைகளில் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச உறவுகள் குறித்த நிபுணரின் மதிப்பீடு என்ன?
இது தொடர்பில் சர்வதேச உறவுகள் மற்றும் பூகோள அரசியல் ஆய்வாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய இவ்வாறு குறிப்பிடுகிறார். அதாவது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயமானது தாமதிக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகிறது. அவர் ஜனாதிபதியாகி ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த இருதரப்பு விஜயம் தாமதமடைவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக இந்தியா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை கண்காணித்தது. மதிப்பிட்டது என்று கூறலாம்.
ஆனால் இக்காலப் பகுதியில் இந்தியா இலங்கைக்கான சகல உதவிகளையும் செய்தது. உதவிகளில் இந்தியா பின்நிற்கவில்லை. தற்போது இந்தியா ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் தொடர்பாக ஒரு தெளிவுக்கு வந்திருக்கின்றது. அதனடிப்படையிலேயே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அது மட்டுமின்றி சீனா இலங்கையுடன் நெருங்கி வருவதை இந்தியா உணர்ந்தது. அதன் காரணமாக இந்த விஜயம் விரைவுபடுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையை பொறுத்தவரையில் இது மிக முக்கியமான விஜயம். இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூற வேண்டும்.
இந்தியாவின் உதவி காரணமாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே அதற்கு இந்தியாவுக்கு நன்றி கூறுவதற்கு ஜனாதிபதி இந்த விஜயத்தை பயன்படுத்த வேண்டும். இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கி செயல்பட வேண்டுமென்று கருதுகிறது என்பதை உணர முடிகிறது. இவ்வாறு குறிப்பிடுகிறார் சர்வதேச உறவுகள் மற்றும் பூகோள அரசியல் ஆய்வாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய.
பிராந்திய ரீதியில் பலமான நாடு என்ற அடிப்படையிலும் இலங்கை மிக நெருக்கமான அயல்நாடு என்ற வகையிலும் இலங்கையின் எந்தவொரு நெருக்கடியாக இருந்தாலும் முதலாவதாக உதவி செய்யும் நாடாக இந்தியா தொடர்ச்சியாக இருந்து வருகிறது. முக்கியமாக 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் இலங்கைக்கு இந்தியா முதலாவது நாடாக உதவிகளை செய்தது.
2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் கூட முதலாவதாக இலங்கைக்கு உதவிய வெளிநாடு என்ற அடிப்படையில் இந்தியாவே முன்வந்து உதவி செய்தது. இயற்கை அனர்த்தங்களின்போதும் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது. அதனடிப்படையியே 2022 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டபோது இந்தியா உதவிகளை வழங்கியது.
இந்திய வெளியுறவு செயலரின் வருகை
இதனிடையே ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து ஆராய இலங்கை வந்த இந்திய வெளியுறவு செயலர் வினய் மோகன் குவத்ரா இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு டில்லியில் அன்பான வரவேற்பு காத்திருக்கிறது. ஜனாதிபதியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சாதகமான மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை வெற்றியடைச் செய்வதே எமது இலக்காகும். அவர் நன்கு அறியப்பட்ட தலைவர் என்பதோடு, இந்திய – இலங்கை உறவின் மிகவும் வலுவான ஆதரவாளருமாவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை இருநாடுகளின் உறவு மிக நெருக்கமாக வலுவடையதையே காட்டுகின்றன.
இந்நிலையில் இம்முறை ஜனாதிபதியின் இந்திய விஜயமானது அரசியல் ரீதியிலும் இராஜதந்திர ரதியிலும் பிராந்திய மட்டத்திலும் மிக முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. முன்னரை விட தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்திருக்கின்றது என்பதே நோக்குனர்களின் அரசியல் ஆய்வாளர்களின் சர்வதேச ஆய்வாளர்களின் பார்வையாக அமைந்திருக்கிறது. விஜயத்தின் பெறுபேறுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை தற்போதே கணிக்க பலரும் ஆரம்பித்துவிட்டனர்.