நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது “டிட்வா” சூறாவளி பற்றி இந்தியா காலநிலை திணைக்களம் இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை. இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக தெளிவுப்படுத்தலை கோரியுள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளி பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அரசாங்கம் அதனை கனவத்திற் கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஒருசில ஊடகங்களும் அதற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குகின்றன.
சூறாவளி குறித்து உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கோ அல்லது அரச நிறுவனங்களுக்கோ ஏதேனும் அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருக்குமாயின் அவற்றை வெளிப்படுத்துமாறு பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளேன். இதுவரையில் எவரும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.
நவம்பர் 12 முதல் 20 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் பிராந்திய காலநிலை சிறப்பு மத்திய நிலையம் சாதாரண வானிலை அறிவுறுத்தல்களையே வெளியிட்டது. டிட்வா சூறாவளி தொடர்பில் இந்திய காலநிலை திணைக்களம் இலங்கைக்கு எவ்வித அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.
இந்திய காலநிலை திணைக்களம் காலநிலை குறித்து வெளியிட்ட அறிவிப்புக்களை திரிவுப்படுத்தி இந்திய எக்பிரஸ் இலங்கை தொடர்பில் செய்தி வெளியிட்டது.
இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இந்திய ஊடகம் வெளியிட்ட செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக விளக்கம் கோரியுள்ளது.
இலங்கையில் போலியான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் உள்ள நிலையில் இந்தியாவில் அவ்வாறு இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்..




















