உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடுசெந்தில்பாலாஜின் கைது சரியானது என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாகத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை, ‘சட்டத்திற்கு புறம்பானது’ என்று அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்தார். அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அங்கு இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,ஏ.எஸ். போபண்ணா ஆகியோரின் தலைமையில் இன்று (8.8.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்வதற்கு அதிகாரம் உண்டு, அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல” என்று தீர்ப்பு அளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும் “குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு இரண்டின் கீழ் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும்பொழுது அந்த நபரை கஸ்டடியில் வைக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. அது நீதிமன்ற காவலாகவும் இருக்கலாம் என்ற புரிதலின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல ” என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
”அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும் போது 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அனுப்பம் ஜே குல்கரணி என்ற வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது. எனவே அந்த குறிப்பிட்ட விவகாரம் மட்டும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்படுகிறது.
அதேநேரத்தில் அமலாக்கத் துறையினர் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது” என தீர்ப்பு வழங்கினர்.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்” என சுட்டிக்காட்டினார். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செந்தில் பாலாஜியின் உடல்நலத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என தெரிவித்தார். இதனையடுத்து நிலுவையில் இருந்து அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.