உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 14ஆம் தேதி 63 பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக தனி ரயில்பெட்டியை பதிவு செய்து புறப்பட்டுள்ளனர். இந்த ரயில் பெட்டியானது உத்திரப்பிரதேசத்தில் இருந்து ஆந்திரா கர்நாடக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளாக இணைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனையடுத்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற 63 பயணிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் பத்மநாப சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரைக்கு புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக இணைப்பு பெட்டியாக வந்தடைந்த நிலையில் மதுரை ரயில்வே நிலையம் அருகே உள்ள போடிலைன் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 63 பேரும் பயணித்த ரயில் பெட்டியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்பொழுது அந்த ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி காலை உணவை சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ரயில் பெட்டி முழுவதுமாக தீப்பற்றியுள்ளது.சமைத்துகொண்டிருந்த நபர் தீ விபத்து ஏற்பட்டவுடன் தப்பியோடிவிட்டார் இதனையடுத்து பெட்டி முழுவதிலும் தீ மளமளவென பரவ தொடங்கிய நிலையில் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியில் தப்பியோடியுள்ளனர். பெட்டியில் ஒரு சில பயணிகள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த காரணத்தினால் வெளியே வர முடியாத நிலையில் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 5 ஆண்கள் 4 பெண்கள் என 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 8பேர் படுகாயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை ரயில் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து சம்பவம் நடைபெற்ற ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டியில் இருந்து வெடித்து சிதறிய சிலிண்டர் பெட்டியில் ஜன்னல் ஒன்றின் அருகே சிதறிய நிலையிலும் மற்றும் 5க்கும் மேற்பட்ட மண்ணெண்ணெய் அடுப்புகள், கட்டு கட்டாக விறகுகள், நிலக்கரி மூட்டை, சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் டின்கள், பாத்திரங்கள் சமையல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
சம்பவ இடத்தில் ரயில்வே துறை பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மதுரை ரயில்வே பாதுகாப்பு படை கண்காணிப்பாளர், துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.கே.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர்கள் சட்டவிரோதமாக ரயில் பெட்டியில் கொண்டுவரப்பட்டு அவர்கள் சமைத்து வந்தது தெரியவந்தது. ரயில் பெட்டியில் தீ பற்றியவுடன் பெட்டியில் சமைத்துகொண்டிருந்த நபர் தீ விபத்து ஏற்பட்டவுடன் தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.