இலங்கையில். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் ஏற்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து அறிவுறுத்தியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் குறிப்பாக தற்பொழுது சேவையாற்றிவரும் நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இது குறித்த எழுத்துமூல கோரிக்கையையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு தான் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார்.