புத்தளத்தின் கற்பிட்டி – வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ பிரதேசங்களில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 4,098 கிலோ 500 கிராம் பீடி இலைகளுடன், 4 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், இச்சந்தேகநபர்களிடமிருந்து கப் ரக வாகனம், லொறி, டிங்கி இயந்திரப்படகு மற்றும் மோட்டார் சைக்கிளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கற்பிட்டியைச் சேர்ந்த 24, 25, 45 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
கற்பிட்டி, இலந்தையடி கடற்கரை பிரதேசத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான தம்பபண்ணி கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது, 70 பொதிகளில் அடைக்கப்பட்ட 2,223 கிலோகிராம் பீடி இலைகளுடன், மோட்டார் சைக்கிளொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, கற்பிட்டி வன்னிமுந்தல் கடற்கரை பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது, 19 உரப்பைகளில் அடைக்கப்பட்ட 639 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி இயந்திரப் படகொன்றுடன், இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளுவ கடற்கரை பிரதேசத்தில் கடந்த செவ்வாய் (26) இரவு சந்தேகத்துக்குரிய முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினர் சோதனை செய்த போது, அதிலிருந்து 1,236 கிலோ 500 கிராம் பீடி இலைகளுடன், இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், லொறி, கப் ரக வாகனம், டிங்கி இயந்திரப்படகு ஆகியவற்றுடன் சந்தேகநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தினரிடமும் மதுரங்குளி பொலிஸாரிடமும் ஒப்படைக்கவுள்ளதாகவும், கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.