தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மூத்த அமைச்சர்களைக் குறிவைத்து அவர்கள் மீது தொடர்ந்து ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இப்போது வரை அவர் சிறையில் இருக்கிறார்
அதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, எம்.பி ஜெகத்ரட்சகன் என்று மூத்த திமுக தலைவர்கள் குறிவைத்து ரெய்டுகள் தொடர்ந்தன. இதனிடையே இப்போது அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளவர் எ.வ.வேலு.. இன்று காலை முதலே இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர். அவருக்குச் சொந்தமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நண்பர்கள், உறவினர்கள் என அவருக்குத் தொடர்புடைய பல இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை, கோவை எனப் பல இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஏராளமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த ரெய்டு நடக்கிறது. திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் எனப் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. மேலும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.
எ வ வேலு கவனித்து வரும் பொதுப் பணித்துறை என்பது பொதுவாகக் கட்டுமான பணிகளைத் தான் கவனிக்கும்.. இதன் காரணமாகவே அப்பாசாமி மற்றும் காசா கிராண்ட் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். மேலும், கரூரில் எ வ வேலுவின் நெருக்கமான நண்பர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அமைச்சர் எ வ வேலு எங்கே இருக்கிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் அவரது வீடு ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் இருக்கிறது. ஆனால், அமைச்சர் எ வ வேலு இங்கே இல்லை.. டிடிகே சாலை இல்லம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே இன்று காலை 8.30 மணி வரை வருமானவரித்துறை அதிகாரிகளும் யாரும் இல்லை. நேற்றைய தினம் எ வ வேலு திருவண்ணாமலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கே இருக்கும் அவரது கேஸ்ட் ஹவுஸ் வீட்டில் அமைச்சர் எ வ வேலு இப்போது இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் அமைச்சர் எ வ வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ரெய்டு சில நாட்கள் வரை தொடரும் என்றே கூறப்படுகிறது. மேலும், இந்த ரெய்டில் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.