வலி.வடக்கு காணி விவகாரம் சட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சந்தித்தார்.
வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகள் நீடிக்கின்ற நிலையில் அவற்றை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைளை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்துக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா, பொதுமக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகளை அரசாங்கம் பல தடவைகள் விடுப்பதாக அறிவித்தபோதும் இன்னமும் ஒப்படைக்காத நிலைமைகள் நீடிக்கின்றன. ஆகவே, அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீது தொடர்ச்சியாக நம்பிக்கைகொள்ள முடியாது என்ற விடயத்தினை தெரிவித்தவர், அதுதொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளார்.
ஏற்கனவே, மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் போடப்பட்ட பல வழக்குகளில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், தான் வலி.வடக்கு காணி விவகாரம் தொடர்பிலும் அவர் தலைமையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மாவை.சேனாதிராஜா பிரயத்தனம் செலுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனுடன் தமிழரசுக்கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும், மாவை.சோ.சேனாதிராஜா கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.