பொத்தக் கால்சட்டை
தீபாவளி சிறுகதை
இயக்குநர் வ.கௌதமன்
நடந்து முடிந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தால், காலம் பலவிதமான சோதனைகளை ஒரு விளையாட்டாக நடத்திவிட்டுத்தான் சென்றிருக்ன்கிறது நம்மைவிட்டு.
ஏறக்குறைய இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னால், இப்போதைய கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு அருகில் உள்ள எடைச் செருவாய் கிராமத்தின் இறுதியிலும், பாளையம் கிராமத்தின் தொடக்கத்திலும் உள்ள பதினைந்து பதினாறு வீடுகளை கொண்ட ஒரு சின்னப்பகுதி. சாலை முழுக்க இரண்டு பக்கங்களிலும் பெரும் புளியமரங்கள். மழைக்காலம் தொடங்கிவிட்டதால் இலைகளெல்லாம் கொட்டி கிளிப்பச்சை நிறத்தில் சிறுசிறு புதிய புளிய இலைகள் துளிர்த்து – காற்றுக்கு தலையசைத்து அந்த சுற்றுப் புறத்தையே குளுமையாக்கிக் கொண்டிருக்கும்…!
அன்று…..
வழக்கமாக கிளைகளில் உட்கார்ந்து விளையாடும் மைனாக்களும், வாலாட்டிக் குருவிகளும் பயந்து படபடத்து கிளைவிட்டு கிளை மாறி மாறி உட்கார்ந்து பறந்து கொண்டிருந்தன…
மேலத்தெரு பசங்களும், இங்குள்ள
பொடிசுகளும் சீனிவெடிகளையும் வெங்காய வெடிகளையும் வெடித்து அதம் பரப்பி, கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவசர அவசரமாகப் பலகாரம் செய்து முடித்து, சாமி கும்பிட்ட பெரிய வயது பெண்கள் ஆக்கனூரிலிருந்து எடைச்செருவாயிலிருக்கும் தனது மகள் வயிற்று பேரப்பிள்ளைகளுக்கு எடுத்துக் கொண்டுபோய் கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை ஆசை, ஆசையாய்ப் பார்க்க –
ஓட்டமும் நடையுமாய் ஓடிக்கொண்டிருக்க…
அவர்களுக்கு தெரியாமல் லெட்சுமி வெடியை கொளுத்திப் போட்டு அந்தப் பெண்கள் பதறுவதை பார்த்து, கைத்தட்டிச் சிரிக்க ..
சிறுவர்களின் ஏழு தலைமுறைகளின் முன்னோர்களையும் இழுத்து அவர்கள் ஏசி ‘வாசாப்பு’ விட்டுச் செல்ல, அதற்கும் இவர்களுக்கு சிரிப்புதான்…
எங்கப்பா திருச்சில எடுத்தாரு. எங்கப்பா கடலூரிலிருந்து எடுத்துக்கிட்டு வந்தாரு. எங்கப்பா இதுக்குன்னே மெட்ராஸ் போயி எடுத்துக்கிட்டு வந்தாரு” என்று ஆளாளுக்கு “புருடா” விட்டாலும் அனைத்துப் பசங்களின் புதுச்சட்டைகளும் திட்டக்குடியில் எடுத்தவைதான். மேல் சட்டையிலும், கால் சட்டையிலும் சந்தனம் வைத்து, குங்குமம் இடப்பட்டிருக்கிறது.
பெரியவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கிடாக்கறி எடுத்து, இட்லி, பணியாரம் செய்து, புதுச்சட்டை உட்பட அனைத்தையும் சாமி முன் வைத்து, படைத்துவிடுவார்கள்.
எண்ணெய் தேய்த்துக் குளித்தவுடன் புதுத்துணி அணிந்து சாப்பிட்டுவிட்டு வெடியோடு வீதிக்கு வந்துவிடுவார்கள் சிறுவர்கள். இருட்டும் வரையில் வெடிகள், பிறகு இருட்டில் மத்தாப்பு.
இவ்வளவு கொண்டாட்டங்களும் நடந்துகொண்டிருக்க தார்ச்சாலையை ஒட்டியிருக்கும் ‘இனிப்புப் புளி’யின் கீழ் உள்ள சொலாப்பு கல்லில் கால்களை ஆட்டியபடி ஒரு பழைய கால்சட்டையோடு, தொண்டையில் ஏதோ அடைக்க மனசு கணத்த நிலையில் ஏழெட்டு வயது நிறைந்த கதிரவன் எட்டி எட்டி சாலையின் கிழக்கே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். காலையிலிருந்து ஒரு ‘பொட்டு’ வெடிகூட வெடிக்கவில்லை.
”எல்லாரும் புதுசட்டை போட்ருக்காங்கம்மா… எனக்குத் துணிகூட இல்லன்னாலும் பரவாயில்ல… வெடியாவது வாங்கித்தாம்மா.” என்று காலையிலேயே நாலைந்து முறை அம்மாவை கேட்டுவிட்டான்.
இருந்து இருந்து பார்த்தவள், “போடா உன் ஒப்பன் பொழைச்ச பொழப்புக்கு அந்தாளையே போயி கேளு… கட்சி கட்சின்னு இருபத்தி நாலு மணி நேரமும் ஓடுனா பொட்டச்சி நாமட்டும் என்ன பண்ணுவேன் போ” என முட்டி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டின் பின்கட்டுக்குப் போய்விட்டாள்.
திட்டக்குடி போன அப்பா எப்படியும் திருவேங்கடத்தில் (பேருந்து நிறுவனத்தின் பெயர்) வந்துவிடுவார் என்றுதான் கதிர் – கிழக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்,
சொலாப்பு கல்லருகே கொஞ்ச நாட்களாகத்தான் பேருந்து நின்று போகிறது. அதற்கும் காரணம் அப்பாதான். இவர் கம்யூனிஸ்ட்காரர் என்பதால் சண்டையிட்டு – போராட்டம் செய்து, அதன்பின்தான் அந்த இடம் ‘ஸ்டாப்’ ஆனது.
மதியம் பனிரெண்டு மணி. காலையில் சாப்பிட்டது சோளச் சோறு. ஆனால் ஊர் முழுக்க கறி வாசமும், பலகார மணமும். தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை? திடீரென்று அப்பா நம் கண்முன் வந்து எல்லாப் பயலுகளையும் போல் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்து விட மாட்டாரா என்கிற ஏக்கம். ஆசை அவனது மனசு முழுக்க காட்சியாக வந்து வந்து போக, பேருந்து மட்டும் ஏனோ வெகுநேரமாக வரவில்லை.
முன்பெல்லாம் அப்பா எப்பொழுதும் இரவு பத்தரை மணி பஸ்சுக்குத்தான் வருவார். ஏனென்றால் அதுதான் கடைசி பேருந்து. அம்மா, கதிரவன் உட்பட அவனது மூத்த சகோதரிகள் இருவர் தூங்குவதற்குள் அப்பா வாங்கி வரும் ஒரு கிலோ அரிசியை கஞ்சி காச்சி அவர்களுக்குப் பசி அடக்கிவிட காத்திருப்பாள் அம்மா. அதற்குள் பிள்ளைகள் தூங்கிவிடும்.
சில நேரங்களில் திட்டக்குடி தொந்திக்கடையில் பரோட்டா சால்னாவோடு பேருந்திலிருந்து இறங்குவார் அப்பா. தூங்கிக் கொண்டிருக்கின்ற கதிரையும், பிள்ளைகளையும் தூக்கக் கலக்கத்தில் தூக்கி வைத்து, “இன்னிக்குத் தோழர்கள் மெட்ராசுலிருந்து வந்துருந்தாங்க. விவசாயிகள் சங்கக் கூட்டம்” என்றபடியே பேசிக்கொண்டு, தன் கையாலேயே ஊட்டிவிட்டு வாயை துடைத்துப் படுக்க வைத்துவிடுவார்.
அம்மாவிற்கு கோபம் கோபமாக வரும். ஆனால் கதிருக்கு அப்பாமேல் எப்பொழுதும் பாசம்தான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பாவை பலர் தேடிவந்து ‘தோழர்… தோழர்…’ என்று அழைப்பது ஏனோ அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
ஏதோ ஒரு பேருந்து வருகிறது. கதிருக்கு முகம் பூக்கிறது. சேகர் பஸ்தான். ஏதோ இவன் பார்வைக்கு நிற்பதுபோல் வந்து வேகமெடுக்கிறது. மீண்டும் வெறுமை.
கதிருக்கு, தான் முதன் முதலாக கால்சட்டை போட்ட நிகழ்வு வந்து போகிறது.
அப்பா ஒரு நாள் சொல்கிறார், ‘கம்யூனிஸ்ட் கட்சி கொடி தச்சது போக கொஞ்சம் துணி மீந்துருச்சி. உனக்கு ஒரு கால்சட்டை தைக்கலாம். பிரஸ்ல இருக்கு நாளைக்கு எடுத்தாரேன்…’
சொன்ன நொடியிலிருந்து கதிருக்கு றெக்கைக் கட்டிய நிலைதான். அதற்கு முன்வரை ராமலிங்க சித்தப்பாவின் பல துண்டுகள்தான் இவனுக்கு இடுப்பு மறைப்பு. அதற்கு முன்பு எப்பவோ யாரோ போட்டுப் பயன்படுத்திவிட்டுத் தந்த ஒரு கால்சட்டை. அதுவும் நைந்து நைந்து பிய்ந்து தூக்கியெறிந்தாகிவிட்டது. சில நேரம் துண்டை ராமலிங்கம் சித்தப்பா பிரியத்தோடு தருவார். பல நேரங்களில் அவர் நடந்து செல்லும்போது பின்பக்கமாக பதுங்கி சென்று இழுத்துக் கொண்டு ஓடும் நிலைதான்.
துணி கைக்கு வந்து சேர ஆறேழு நாட்களாகிவிட்டன. ரத்த நிறத்தில் துணி. எதுவாக இருந்தால் என்ன? புதுக்கால்சட்டை!
பாளையத்திலிருந்து முக்கால் மைல் தூரம் உள்ள மணலாற்றை கடந்தால் ஆடுதுறை. அப்பா ஆடுதுறை கோவில் பக்கத்தில் உள்ள டெய்லரிடம் அழைத்துச் சென்றார். கதிருக்கு அளவு எடுக்கப்பட்டது. சொல்ல முடியாத ஆனந்தம். தைத்து இரண்டு நாட்களில் தந்துவிடுவதாக வாக்குறுதி. இரண்டு நாட்கள், நான்கு நாட்களாகி விட்டன. கொடியில் வெட்டாமல் அப்படியே கிடக்கும் சிகப்புத்துணி. தினமும் காலையிலும் மாலையிலும் ஆற்றை கடந்து டெய்லர்முன் சென்று நின்றதுதான் மிச்சம்.
“ஏண்டா காசும் தரல, ஒண்ணும் தரல… உன் ஒப்பன் வேணா கட்சி கட்சின்னு ஒங்க குடும்பத்த வுட்டுட்டு ஓடலாம். அதுக்காக நான் ஓசில தச்சித் தரமுடியுமா? எனக்கும் குடும்பம், குட்டி இருக்குல்ல… காசோட வந்தா கைல கால்சட்டையோட போலாம்…” என்றபடியே டெய்லர், கழுத்தில் கிடக்கும் அளவு நாடாவை எடுத்து வேறொரு துணியில் வைத்து பென்சிலால் கோடிழுத்து வெட்ட ஆரம்பிக்கவே, கதிருக்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. அழுதபடியே வீட்டிற்கு வந்து அப்பாவிடம் சொல்ல, ‘நாலைஞ்சு நாள்ல வாங்கிடலாம்’ என்றவாறே வாடகை சைக்கிளை மிதித்து கட்சிப் பணிக்கு புறப்பட்டுவிட்டார். ஆடுதுறை குளத்துக்கு போகிறமாதிரி டெய்லர் கடையையும், கயிற்று கொடியில் அப்படியே கிடக்கும் சிறப்புத் துணியையும் பல தடவைகள் கதிர் பார்த்தபடி சென்று வந்தான்.
துக்கம் தொண்டையை அடைக்கும். வெயிலில் ஆற்று மணலில் கால் சுடச் சுட நடந்து வந்தது வேறு! மீண்டும் திரும்பி வீட்டிற்கு போக வேண்டும்.
ஒரு நாள் மாலைநேரம் ஏதோ ஒரு துணிவோடு டெய்லர் கடை முன்பு போய் நின்றான். அவனையே உற்று பார்க்கிறார். கொடியில் துணி இல்லை. கதிருக்கு உதடு துடிக்கிறது. பேச்சு வரவில்லை. அந்த ஆள் இவனைக் கண்டுகொள்ளாமல் சட்டென்று முகம் திருப்பிக் கொள்கிறார்.
கண்ணிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்ட, கதிர் திரும்பி நடக்க ஆரம்பிக்கிறான். “டேய் இங்க வாடா” டெய்லரின் குரல்! திரும்பி பார்க்க, “ஒப்பன் காசு குடுத்து வாங்கறதுக்குள்ள இது எங்க கடையிலேயே கெடந்து மக்கிடும். இந்தா போட்டுக்க, காந்தி கணக்குல எழுதிக்கிறேன்” எனத் தூக்கிப் போட – அப்பாவை திட்டிய அவமானமா, அல்லது அதிகப் படியான மகிழ்ச்சியா? என்பது தெரியாமல் அங்கிருந்து கலங்கியபடியே ஆற்றை நோக்கி ஓடி வந்தான்.
மாலை மங்கி, நிலவு பூத்து, நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. கோமணத் துணிபோல் நடு ஆற்றில் வெள்ளிக்கோடாகத் தன்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனருகே ஓடிவந்து மூச்சிறைக்க நின்று – ராமலிங்க சித்தப்பாவின் துண்டை அவிழ்த்து விட்டு சிகப்பு கால்சட்டையை போட, உலகமே தன்னைச் சுற்றி வருவதுடோல் கதிர் குதூகலித்துப் போனான். ஒரு புது நம்பிக்கை. ஆற்றிலிருந்து தெரியும் பிரம்மாண்டமான குற்றம் பொறுத்தவர் ஆலய கோபுரத்தைப் போல தானும் கம்பீரமானவன் என்பது மாதிரி நெஞ்சை நிமிர்த்திப் பெருமூச்சு இழுத்து விட்டான்.
அந்த சிகப்பு கால்சட்டையும், முடிந்தவரை உழைத்து பின்னால் இரு வட்டங்களை உருவாக்கிவிட்டது. பசங்கள் பேப்பர்களை கிழித்து ‘போஸ்ட் பாக்ஸ்’ என்று உள்ளே போட்டுக் கிண்டலடிக்க, நான்கு நாட்களுக்கு முன்னால்கூட மாரியம்மன் கோவில் முன் வையாபுரிக்கும் கதிருக்கும் கட்டிப்புரண்ட சண்டை!
நடு உச்சியில் சூரியன். மணி ஒன்றரை ஆகிவிட்டது. வந்த பேருந்தெல்லாம் ஒரு சில நின்றும் – சிலர் இறங்கியும் அப்பா மட்டும் அதில் இல்லை.
தான் செய்தது சரியா, தவறா? என்று கதிருக்கு தன்மேல் கோபமாகவும், அதேநேரத்தில் பெருமையாகவும் ஒரு நிகழ்வு கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்தது. திருச்சிக்கு சென்றுவிட்டு கடலூருக்கு ஒரு குடும்பம் புதிய அம்பாசிடர் கார் ஒன்றில் பயணித்து, பசி எடுக்கவே – இனிப்புப் புளியின் கீழ் நிறுத்தி பெரம்பலூரம்மாள் வீட்டில் தண்ணீர் வாங்கி வைத்துச் சாப்பிட்டு முடித்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து காற்று வாங்கி விட்டு அவர்கள் புறப்படத் தயாரானபோது, கதிரும் அவன் வயதுப் பசங்களும் அங்கே கூடி அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பணக்கார அம்மா ஆளுக்கு இரண்டு திராட்சைப் பழங்களைத் தந்துவிட்டு வண்டியில் ஏறி புறப்படப் போகும் சமயத்தில் காரின் வலதுபக்கம் டயரருகே கிடந்த பத்து ரூபாய் தாளை கதிர் பார்த்துவிட்டான். அது பணமா, வேறு தாளா?” என்பது பெரும் குழப்பம் இவனுக்கு.
வண்டியை எடுத்துவிட்டார்கள். அது பணம்தான். ஓடிப்போய் எடுத்தவன் வேகமாகக் கத்திக்கொண்டே “ஏங்க ஏங்க பணம்” என்று பின்னால் ஓட அந்தம்மாவின் காதில் விழுந்துவிட்டது. வண்டி நிற்கவே, இறங்கி புன்சிரிப்போடு வாங்கிக் கொண்டு ஒரு திராட்சைக் கொத்தை அவன் கையில் திணித்துப் பாராட்டிவிட்டு கார் புறப்பட்டுவிட்டது. ஆளுக்கு இரண்டாக திராட்சைப் பழத்தை பிட்டுத் தின்றுகொண்டே… இவனுக்குப் பலமான திட்டு விழுந்தது. இப்பொழுது நினைத்துக் கொண்டான். அந்தப் பத்து ரூபா இருந்தாகூட ஒரு புதுச்சட்டை தச்சிருக்கலாம். “ச்சீ, ஆனாலும் அந்த காசுல தச்சுப் போட்டா நாம மனுஷனா? அதுக்கு அம்மண குண்டியோட கூட திரியலாம்”
தூரத்தில் சத்தம். அது பேருத்து இல்லை. மரத்துண்டுகள் ஏற்றிவந்த லாரி. கதிர் வீட்டிற்கு மதியம் சாப்பிடப் போகவில்லை.
ஓலைப்பட்டாசுகளும், /பாம்களும் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் மாலைக் காட்சிக்கு “கிருஷ்னா பேலசுக்கு” போவதாக பேசிக் கொள்கிறார்கள். சிரிப்பும் கும்மாளமும் தவிர பசங்களிடம் வேறு எதுவும் இல்லை. ஆனால் காலையிலிருந்து நாம ஒரு தடவைகூட சிரிக்கலையே, கடைசிவரைக்கும் நம் வாழ்க்கை இப்படியேதானா?’ என அவன் மனம் குமுறுகிறது. அவர்களைக் கடந்து எழுந்து போகவும் மனசு வரவில்லை. எழுந்து நடந்தால் ‘போஸ்ட் பாக்ஸ்’ என்று கிண்டலடித்துவிடுவார்கள் என்று பயம்.
பேருக்கு ஒரு சின்ன சீனிபட்டாசுகூட கொடுத்து எவனும் வெடிக்க சொல்லவில்லை. கதிரின் மனசு மட்டுமல்ல பகலும் கரைந்து மங்க ஆரம்பித்துவிட்டது. தூரத்தில் எங்கெங்கோ மத்தாப்பு பொறிகள் தெறிக்கிறது. இனியும் கிழக்கு நமக்குச் சாதகமாக இருக்காது என முடிவெடுத்து, வீடு நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.
அம்மா எங்கேயோ அரிசி கடன் வாங்கி வந்து சோறாக்கி வைத்திருந்தது. கதிரின் முகத்தை பார்த்துக் கலங்கியபடியே “அடுத்த வருஷம் நல்லா கொண்டாடலாம். மாரியாயி நம்பளக் கைவிடமாட்டா” என்று சொன்னதுகூட கேட்காமல் வீட்டின் உள் அறைக்குள் சென்று சுருண்டு படுத்துக் கொள்கிறான்,
சொலாப்பு கல்லருகே ஹாரன் அடித்தபடி ‘நாராயணமூர்த்தி பேருந்து’ வந்து நிற்கிறது. சனங்கள் இறங்குகிறார்கள்.
கதிரின் வீட்டின் முன்னால் செருப்பு கழட்டிவிடும் சத்தம். அம்மா ஓடிச் சென்று சில்வர் சொம்பில் தண்ணீர் மோந்து வந்து தருகிறாள். “எங்கே அவன்?” – கதிருக்கு சட்டென்று அந்தக் குரலைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அம்மா கலங்கியபடியே, “எல்லாரும் புதுச்சட்டை போட்டுருக்காங்க எனக்கு இல்லியா?”ன்னு கேட்டுக் கேட்டு அழுதுட்டு சாப்பிடாம கூட உள்ள போயி படுத்துகிட்டான் தம்பி.
“கதிரு” என்றபடியே இருட்டறைக்குள் நடந்து வரும் சத்தம். இப்பொழுது புரிந்துவிட்டது கதிருக்கு. அவனுக்கு மிகவும் பிரியமான அவனது தாய்மாமன் பாண்டுவின் குரல் அது.
பெருமூச்செடுத்து கதிருக்கு அழுகை வந்துவிடுகிறது. மாமா அவனை எழுப்பித் தூக்குகிறார். இவன் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிடுகிறான். அவனது கண்ணீரை துடைத்துவிட்டு, “ஏண்டா கண்ணு… எதுக்குடா அழுவுற? மாமா உனக்கு வெடி வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றபடியே அவனது முன் சாமிக்கு படையல் வைப்பதுபோல் ஒவ்வொன்றாக மஞ்சள் பையிலிருந்து எடுத்து வைத்தார்.
இறுதியாக பேப்பர் சுற்றிய ஒரு பொட்டலத்தை எடுத்து, “ஒனக்கு கால்சட்டை, மேச்சட்டையெல்லாம் மாமா வாங்கியாந்திருக்கேன்” என்று பிரித்து அவனின் மார்பில் வைத்து “நல்லாருக்கா?” என்க, அம்மா விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விடுகிறாள். கதிருக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. “எதுக்குடா கண்ணு அழுவுற…? தாய் மாமங்கறவன் தாய்க்குச் சமமானவன்டா. நீ நல்லாப் படிச்சு, பெரிய ஆளாயி என்னைப் பாத்துக்கிறியோ இல்லையோ, ஒங்கம்மாவ பத்ரமா பாத்துக்கணும்” என்றபடியே அவனுக்கு கால்சட்டையையும் மேச்சட்டையையும் போட்டுவிட்டு, “ஜம்முன்னு ராசா மாதிரி இருக்க பாரு” அவனை வாரி அணைத்து முத்தமிட கதிர் மாமாவை கட்டிக் கொள்கிறான்.
“அக்கா, என் மாப்ளைக்கு சாப்பாடு போட்டு எடுத்தா” என்றபடியே கதிரை தன் மடியில் உட்கார வைத்து தட்டில் வந்த சோற்றையும், குழம்பையும் பிசைந்து பாசத்தோடு ஊட்டிவிட்டு, வாய் துடைத்து, வீட்டு வாசலின் சிம்னி விளக்கில் மத்தாப்பு கொளுத்தி கதிரின் கைகளில் கொடுத்து அவன் முகத்தில் பூரித்த மகிழ்ச்சியை அவர் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
சிரித்தபடியே மத்தாப்பால் வட்டம் போட்டுக் கொண்டிருந்த கதிர் – திரும்பி தனது மாமா முகத்தைப் பார்க்க சட்டென்று கலங்கிவிடுகிறான். “சீக்கிரம் கொளுத்து – இன்னம் சங்கு சக்கரம் இருக்கு – பாம்பு மாத்திரை இருக்கு – புஸ்வாணம் இருக்கு…” என்றவரை அவன் பார்த்துக் கொண்டிருக்க – அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார்.
குறிப்பு: இது கதையல்ல, உண்மைச் சம்பவம்! இதில் ‘கதிரவன்’ என்று வரும் இடத்திலெல்லாம் ‘கௌதமன்’ என்றும் போட்டு வாசித்துக் கொள்ளலாம். இந்த நிகழ்வை எழுதும்போது என் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்கிறது. இறுதிவரை நான் உயிரையே வைத்திருந்த எனது பாண்டு மாமா கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் என் பெயரை உச்சிரித்துக்கொண்டே தனது கடைசி மூச்சினை முடித்துக் கொண்டார். .
ஒவ்வொரு தீபாவளி அன்றும் எப்போவோ சொன்ன என் பாண்டுமாமாவின் குரல் மட்டும் எனக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கும் “தாய் மாமங்கறவன் தாய்க்குச் சமமான வன்டா, நீ நல்லாப் படிச்சு பெரிய ஆளாயி – என்னை பாத்துக்கறியோ இல்லியோ பத்ரமா ஓங்கம்மாவை பாத்துக்கணும்” “நீ இப்ப எங்களோடு இல்லைன்னாலும் சொல்றேன்… நா அம்மாவை நல்லா பாத்துக்கிறேன் மாமா.”
என்னத்த சொல்ல… இப்போது அம்மாவும் இல்லை.
– இயக்குநர் வ.கௌதமன்
புகைப்பட உதவி – நன்றி – அருண்