அந்த ஒத்தையடிப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது.
ஆற்றில் தண்ணீர் `சலசல’ வென ஓடிக்கொண்டிருந்தது. இருபுறமும் ஆளை மறைக்கும் நாணல்கள். பெரு வெள்ளத்தின்போது மலையிலிருந்து அடித்து வரப்பட்ட பெயர் தெரியாத மரத்தின் விதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து விண்ணை முட்டிக்கொண்டு நின்றது. சின்னக் கருத்தப்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் வழியில், ஊருக்கு சற்று வெளியே ரோட்டிலிருந்து ஆற்றுக்குப் பிரிந்து செல்லும் ஒத்தயடிப் பாதையில் ரஞ்சன் நடந்துகொண்டிருந்தான். அரசு விடுதியில் தங்கி, கல்லூரியில் படிக்கும் அவன் விடுமுறை நாளில் ஊருக்கு வரும்போது, வீட்டில் இருப்பதைவிட அந்தப் பெரிய மரத்தின் தெற்குப் பக்க வேர் பகுதியில்தான் அதிகம் இருப்பான். ஐந்து ஆட்கள் ஒன்றாக சேர்ந்து நின்றால் மட்டுமே கட்டிப்பிடிக்க முடிகிற மிகப்பெரிய மரம் அது.
ரஞ்சனுக்கு அந்த மரத்தின் நிழலில்தான் கேள்விகள் எழும். பதில்களை அவனின் அதிக நியூரான் அடர்த்தி உள்ள ஒன்னேகால் கிலோ ஐன்ஸ்டீன் மூளை அலசி ஆராயும். அந்த வகையில் இந்த மரம் அவனுக்குப் புத்தனின் போதி மரம் மாதிரி தான்.
அவ்வப்போது திரும்பி அந்த ஒத்தையடிப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது. “நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்” பாடல் விசிலாக அவனிடத்தில் வெளிப்பட்டது. சற்று நேரம் காத்திருந்தவன், நியூட்டன், ஆல்வா எடிசனையெல்லாம் மறந்து சற்று கோபமானான். இனி வீட்டுக்குப் போகலாம் என்று எழும்பி பேன்டின் பின்பக்கத்தை இரண்டு கைகளாலும் தட்டி தூசியை உதறினான். திரும்பி ஒத்தையடிப் பாதையில் நடக்கையில் மரத்தின் பின்புறத்தில் இருந்து அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்டது.
“ஹா.. ஹா… ஹா …”
இது மகிமாவின் சத்தம்தான். அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.
“ஊசி மணி பாசியோவ் …
எங்கிருக்காவியோவ் …..
ஊசி மணி பாசியோவ் …” இயல்பாய் வந்தது அவனுக்கு.
“கண்ணான கண்ணனுக்கு அவசரமோ…..” எதிர் பாட்டுப் பாடினாள் மகிமா
ரஞ்சன் மரத்தின் பின்பக்கம் ஓடினான்.
“செல்லக் குட்டி, எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா?”
“தெரியுமே”
“அப்போ, முன்னாடியே வந்துட்டியா?”
“ம்ம்ம். நீ என்ன செய்யிறானு பாத்துக்கிட்டே இருந்தேன்….. உன்னை பாத்துகிட்டே இருக்கணும்போல இருக்கு ரஞ்சன்”
ரஞ்சன் அவளை கட்டிக்கொண்டான்.
“எங்க அப்பாவ நினைச்சாதான் பயமாயிருக்கு’
அவள் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
“கண்டிப்பா என் மாமனார், உன்னை எனக்கு கட்டித் தரமாட்டார். நீ பெரிய இடம்….. என் சாதி வேற”
அவள் அவன் வாயைப் பொத்தினாள்.
அவன் கையை விலக்கினான்.
“உண்மை அது தானே?”
`அப்போ என்னைக் கல்யாணம் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா?’ விசும்பல் அவளிடம் வெளிப்பட்டது
“ஏய்… மகிகுட்டி…. பயந்துட்டியா? நீ இல்லாம நான் மட்டும் உயிரோடு இருந்துடுவேனா?”
`அப்படினா இப்பவே இந்த ஊரை விட்டுப் போய்விடுவோம்’
“இன்னும் ஒரு 6 மாசம்தான். என் அம்மா ஆசைப்படி, மாஸ்டர் டிகிரி முடிச்சிடுவேன். நீயும் UG முடிச்சிருவே. அதுக்கப்புறம் அம்மாவோட சேர்ந்து நாம மூணு பேரும் வெளியூருக்குப் போய் சந்தோஷமா வாழலாம், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க”
கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள், தூரத்தில் தனக்காகக் காத்து நின்ற தோழியைக் கை காட்டி அழைத்தாள்.
“சரி, நான் கிளம்புறேன்” என்ற ரஞ்சன் ரோட்டுக்கு நடந்தான்.
மகிமாவும் ரம்யாவும் குடத்தில் தண்ணீரை நிரப்பி, இடுப்பில் சுமந்துகொண்டு வீட்டுக்குவந்தனர்.
படிப்பு முடிந்து ரஞ்சன் ஊருக்கு வந்திருந்தான். மறுநாள் மகிமா, ரஞ்சன் மற்றும் ரஞ்சனின் அம்மா மூவரும் வெளியூர் செல்வதாய் ஏற்பாடு. மாலை 4 மணிக்கு ஆற்றங்கரைக்கு மகிமாவை வரச்சொல்லியிருந்தான்.
“அப்பா, நான் தண்ணி எடுத்துட்டு வரேன் ” என்றவள் வாசல் கதவின் நிலைக்கு மேலே சுவரில் மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தாள். பிளாஸ்டிக் மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கருகமணி செயினுடன் மங்களகரமாக அம்மா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். தொட்டுக் கும்பிட்டாள்.
`சரிம்மா’ என்ற ராகவன் அதைப் பார்த்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒண்ணும் தெரியாததுபோல் முன் ஹாலில் கட்டிலில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பாதியாக மூடியிருந்த கீழ் கதவைத் திறந்துகொண்டு தெருவில் நடந்தாள்.
`உள்ளம் கொள்ளைப் போகுதே ‘ பாடல் அவள் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது.
அந்தப் பெரிய மரம்தான். அதை நெருங்கிவிட்டாள். அதை நெருங்க நெருங்க, நெஞ்சம் படபடத்தது. ஆர்வம், சந்தோஷம் என்று அவள் மனதில் பல ரசங்களின் கலவை கூத்தாடியது.
“ரஞ்சன்….”
பதில் இல்லை
“ரஞ்சன்…. நான் மகிமா வந்துட்டேன்”
மரத்தின் இலைகள் காற்றில் அசைவதைப் பார்க்க உள்ளத்தில் முதல்முறையாக பயம் எட்டிப்பார்த்தது. மரத்தைச் சுற்றி தெற்குப்பக்கத்துக்கு வந்தாள். யாரையும் காணோம்.
“ரஞ்சன்… ரஞ்சன்….. அம்மா….”
`ஏன் இன்னும் வரவில்லை? ஏதும் பிரச்னையா?’ அவள் மனதில் பல கேள்விகள். அப்படியே ரஞ்சன் உட்காரும் இடத்தில் அமர்ந்தாள்.
சூரியன் மேற்கு வானில் மெல்ல மறைந்துகொண்டிருந்தான்.
குடத்தில் தண்ணீர் நிரப்ப மறந்துபோய் அப்படியே வீட்டுக்குத் திரும்பினாள்.
அப்பா இன்னமும் டிவிதான் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு சாப்பாடு போட்டுக் கொடுத்தாள்.
“என்னம்மா, முகம் ஏதோ மாதிரி இருக்கு. உடம்பு ஏதும் சரியில்லையா?”
“இல்லப்பா”
“நீயும் சாப்பிடேன்மா”
“கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுறேன்பா’ சுஜாதாவின் நாவலை கையில் எடுத்துக்கொண்டு நடு ஹாலில் ஈஸி சேரில் உட்கார்ந்தாள். கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் மனம் முழுவதும் ரஞ்சனே நிறைந்திருந்தான். “ஏன் வரவில்லை” என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவள் மனது அவளை கேட்டுக்கொண்டிருந்தது. அப்படியே தூங்கிப் போனாள்.
காலையில் முதல் வேலையாக தோழி ரம்யாவைப் போய்ப் பார்த்தாள்.
“ரஞ்சனைப் போய் பார்த்துட்டு வர்றியா. ப்ளீஸ்” என்றாள் மகிமா.
“நேத்து மத்தியானமே அவரும் அவர் அம்மாவும் சென்னை போயிட்டாங்களே. உனக்குத் தெரியும்னுதான் நான் நினைத்தேன். அது இருக்கட்டும், ஊர்த்தலைவர் மகள் விஷயம் தெரியுமா உனக்கு” என்றாள் ரம்யா.