விண்ணில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றதுடன், அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது.
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் நிலவின் தரையில் 8 மீட்டர் தூரம் நகர்ந்து சென்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
“சந்திரயான்3 தரை இறங்கியதும், அதன் வேகத்தில் எழும்பிய மணல்கள் துகள்கள் அடங்குவதற்கு பல மணி நேரங்கள் ஆகும் என்பதால் விஞ்ஞானிகள் காத்திருந்தனர். அதன் பிறகு அதிர்லிருந்த ரோவர், சாய்வு பலகையின் வழியாக வெளியே வந்தது. ஆனால் அது எதிர்பார்த்தது போல் 4 மணி நேரத்தில் வேலை செய்யவில்லை காரணம் அங்கிருந்த தட்ப வெப்ப நிலை. அது சூரிய வெப்பத்திலிருந்து ஆற்றலைப்பெற்று செயல்பட 16 மணிநேரம் ஆனது.”
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான்-3 ரோவர் பிரக்யான் தற்போது ஆய்வு பணிகளை ஆரம்பித்துவிட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் அனைத்து கருவிகளும் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, அங்கு வெப்பநிலை குறைவதை சந்திரயான் 3ன் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.