பழமை வாய்ந்த கோவை பட்டீசுவரன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடக்குமென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்து அறிவிக்க வேண்டும்.
வ.கௌதமன்
தமிழ் நாட்டிலுள்ள தலைசிறந்த திருக்கோவில்களில் “முக்தித் தரும் தலம்” என போற்றப்படுகின்ற பெரும் பெயர் பெற்றது கோவை பேரூர் பட்டீஸ்வரன் கோயில். அத்தகைய கோயிலில் கருவறை, வேள்வித்தீ, விமானம் உள்ளிட்ட முதன்மைப் பகுதிகளில் தமிழில் பாட இதுவரை அனுமதி வழங்காமல் இரட்டடிப்பு செய்யும் தமிழ்நாடு அரசுக்கும் இந்து அறநிலைத்துறை உள்ளிட்ட கோயில் நிர்வாகத்தினருக்கும் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டீசுவரன் கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. உலக உயிர்கள் வளம் பெற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமிழ் பாடியது என பல வரலாற்று படிமங்களை கொண்ட அத்தகைய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென பல்வேறு ஆன்மீக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பெரும் குரலெடுத்து கோரிக்கை வைத்த பின்பும் அரசும் அவர்களை பகைப்பது போல் நின்று நாடகமாடும் எங்களுக்கு எதிரான கூட்டங்களும் கைக்கோர்த்துக்கொண்டு தமிழர்களின் தொன்மத்தையும், அவர்களின் வழிபாட்டு உரிமைகளையும் சிதைப்பதென்பது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. நீதியரசர் திரு. கிருபாகரன் அவர்கள் சமசுகிருதத்திற்கு சரிபாதியாக தமிழும் குடமுழுக்கு உள்ளிட்ட கோவில் சடங்குகளில் மதிக்கப்பட வேண்டும். தவறினால் பத்து லட்சம் தண்டனைத் தொகை கட்டவேண்டும் என சட்ட தீர்வு தந்த பின்பும் ஆட்சியாளர்களும், அதிகரிகளும், கோவில்களில் தங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் கூட்டங்களும் அறமற்று நடப்பதை தொடர்ந்து சகித்துக்கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுமிருக்க முடியாது. வரும் 7ஆம் தேதி நடக்கவிருக்கும் வேள்வி யாகத்தில் அறுபதில் முப்பதினை தமிழர் வேள்வியாளர்களுக்கு வழங்க வேண்டும். கருவறைக்கருகிலும் விமானத்திலும் (கோபுர கலசம்) தமிழ் ஒலிக்க வேண்டும். நடந்து கொண்டிருக்கும் தகிப்பான சூழலையறிந்து அரசும் சம்மந்தப்பட்டவர்களும் நேர்மையான முடிவெடுத்து வரும் 10ஆம் தேதி நடக்கவிருக்கின்ற குடமுழுக்கினை அமைதியாகவும் அழகாகவும் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மாறாக எவர் கேட்கப் போகிறார்கள், வழக்கம் போல் தமிழர்களை ஏமாற்றலாம், ஆன்மீகத் தமிழை அவமதிக்கலாம் என முடிவெடுத்தால் தஞ்சை இராசராசனின் பெரிய கோயில் குடமுழுக்கின் சூழ்ச்சியறிந்து நாங்கள் புறப்பட்டு சென்று வெற்றி கண்டதுபோல் கோவை பட்டீசுவரன் கோயில் குடமுழுக்கிற்கும் நேரில் வரவேண்டியதிருக்கும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வ. கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன்குடில்”
05.02.2025