சென்னை, டிசம்பர் 13, 2025:
புதிய பாரதிய நியாய சமிதா (BNS) சட்டத்தின் கீழ், மனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது போதையில் மனைவியிடம் அத்துமீறுபவர்கள் இனி சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு மற்றும் தண்டனை விவரம்:
புதிய பிஎன்எஸ் (BNS) சட்டத்தின் 85-வது பிரிவின்படி, மனைவி மீதான ‘கொடுமை’ (Cruelty) என்பது தண்டனைக்குரிய கடுமையான குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கணவர் தனது மனைவியை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தினால், அவருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
‘குடிபோதை’ சாக்கு எடுபடாது:
பல நேரங்களில் கணவர்கள் மது அருந்திவிட்டு மனைவியை அவமதிப்பது, அடிதடியில் ஈடுபடுவது அல்லது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இனி இது போன்ற செயல்களுக்கு, “நான் குடித்திருந்தேன், போதையில் செய்துவிட்டேன்” என்று கூறும் சாக்குப்போக்குகள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்று புதிய சட்டம் தெளிவாகக் கூறுகிறது. மது போதையில் இருந்தாலும், மனைவி மீதான வன்முறைக்கு முழுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
குடும்ப வன்முறைக்கு எதிரான இந்த புதிய சட்ட விதிகள் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.



















