கோவிட் வைரசுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள் கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு இந்த பரிசு வளங்கப்பட்டுள்ளது.கோவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் குறித்த தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்ட போதும் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை கோவிட் -19 பரவலில் இருந்து பாதுகாக்க இந்த தொழிநுட்பம் வழி செய்துள்ளது.
முன்னோடியில்லாத ஒரு விடயத்தை ஆராய்ந்து குறித்த தொழிநுட்பத்தை கண்டறிந்து இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக காணப்பட்ட விடயத்துக்கு பரிசு பெற்றவர்கள் பங்களித்துள்ளனர் என இது குறித்து நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
இதே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களுக்கு எதிராக செயற்படுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் உள்ள 50 பேராசிரியர்களைக் கொண்ட நோபல் குழுவினரால், மருத்துவத்துறையில் உருவாக்கிய பெரிய கண்டுபிடிப்புகளுக்காக மதிப்புமிக்க நோபல் விருது வழங்கப்பட்டது.
கட்டலின் கரிகோ: Szolnok எனப்படும் இயற்கை அதிசயங்கள் நிறைந்த பெரிய ஹங்கேரிய சமவெளி பகுதியில் 1955-ல் பிறந்த கட்டாலின் கரிகோ, Szeged பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் Perelman School of Medicine-ல் துணைப் பேராசிரியராகவும் உள்ளார்.
ட்ரூ வெய்ஸ்மேன் : ட்ரூ வெய்ஸ்மேன் தடுப்பூசி ஆராய்ச்சியில் ராபர்ட்ஸ் குடும்பப் பேராசிரியராகவும், ஆர்என்ஏ கண்டுபிடிப்புகளுக்கான பென் இன்ஸ்டிட்யூட் இயக்குநராகவும் உள்ளார்.
1901 முதல் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசானது, இதுவரை உடலியல் அல்லது மருத்துவத்துக்காக 113 முறை வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 12 பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 32 வயதில் இன்சுலின் கண்டுபிடித்ததற்காக 1923-ம் ஆண்டு மருத்துவப் பரிசைப் பெற்ற ஃபிரடெரிக் ஜி. பான்டிங் தான் இதுவரை நோபல் பரிசு வென்ற இளைய மருத்துவப் பரிசு பெற்றவராவார். நோபல் பரிசு அறிவிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் வழங்கப்படுகிறது.