ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய இராணுவத் தளமொன்றில் இன்று பாரிய தீ பரவியுள்ளது.
இதனால், இராணுவத் தளத்துக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 2,000 இற்கும் அதிகமான மக்களை வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கிரைமியாவின் ஆளுநர் சேர்ஜி அக்சியோனோவ் தெரிவித்துள்ளார்.
கீரோவ்ஸ்கி மாவட்டத்திலுள்ள இராணுவப் பயிற்சித் தளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து தவ்ரிதா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் மூடப்பட்டுள்ளது.
இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
இதேவேளை, தனது படையினர் கிரைமியா தீபகற்பத்தில் வெற்றிகரமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக மேற்படி தீயின் பின்னர் உக்ரேன் தெரிவித்துள்ளது.
‘ஆக்கிரமிக்கப்பட்ட கிரைமியாவில் வெற்றிகரமான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்களும், ஆளணி இழப்புகளும் எதிரியினால் மறைக்கப்படுகின்றன’ என உக்ரேனிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கிலிலோ புதானோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய பிராந்தியமான கிரைமியாவை 2014 ஆம் ஆண்ட ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.