1. தமிழ்நாட்டின் திரைப்படங்களை இலங்கையர் நாமெல்லாம் பார்த்து மகிழ்வோம். முற்று முழுதாக கதையோடு ஒன்றி எம்மால் அவற்றை ரசிக்க முடியுமென்ற போதிலும், எனக்கு ஒரு மெல்லிய குறை எப்போதும் இருக்கும். தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை அண்டி எழுதப்படும் வசனங்களை, காட்சிகளை எம்மால் முழுமையாக உள்வாங்க முடிவதில்லை. சென்னையில் வடிவேலுவின் ஆட்டோவில் ஏறும் ஒருவன் காஷுவலாக “புதுக்கோட்டைக்கு வண்டியை விடுப்பா” என்று சொன்னால் வடிவேலு ஏன் ஷாக்காகிறார் என்பது புரிவதில்லை. வெகு காலமாகவே எனக்கு சுன்னாகம் – நாவாந்துறை – தெல்லிப்பழை என்று எங்கள் ஊர்களின் பெயர்களை – நிலக்காட்சிகளை – பெருந்திரையில் பார்க்க ஆசை இருந்தது.
இப்போது யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டக் டிக் டோஸ் திரைப்படத்தின் கதை, நாங்கள் சைக்கிளில் புழுதி கிளப்பித் திரிந்த மண்ணில் – எம்மூரின் ஒழுங்கைகளில் நடக்கிறது. பார்க்கவே மகிழ்வாக இருக்கிறது. எங்கள் மக்களின் மொழியில், எங்கள் நண்பரும் உறவினரும் நடிகராக நடிக்க, ஒரு முழுமையான – பாடல், நகைப்பு, சண்டைகள், எதிர் நாயகன், நாயகி.. என எல்லாம் உள்ள – சினிமா. (வணிக சினிமா, if you will)
நம்மவர் படைப்பு, நாம்தான் தூக்கி விடவேண்டும் என்ற பொறுப்பெல்லாம் தேவையில்லை. நண்பர்களுடன், குடும்பத்துடன் குதூகலமாக திரையரங்கில் ஒரு படத்தை அனுபவிக்க வேண்டும் என்று போனாலே நன்றாகத்தான் இருக்கும். உண்மையாகவே திருப்தி தரும் பொழுதுபோக்குத் திரைப்படம்.
2. எங்கள் மண்ணின், மக்களின் கதைகளை நாம்தான் சொல்லவேண்டும்.. நாம் சொல்லவேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை விட இந்த ‘இளந்தாரிப் பெடியள் குறுக்க மறுக்க ஓடும்’ சினிமா முக்கியமானதா, இப்போது இதை ஓட வைப்பதுதான் முக்கியமா? என்று எண்ணுகிறீர்களா?
எங்கள் கதைகளை சொல்ல, நல்ல சினிமா எடுக்கும் தொழில்நுட்பம், நடிக்கும் பயிற்சி, திரையரங்குகள் கிடைக்கும் அளவு, மக்களின் ஈடுபாடு, பணம் முதலிடுவோர் நம்பிக்கை.. எல்லாமே வெகுளவில் வளரவேண்டும். நமக்கான சினிமாவுக்கு என்று தனியாக ஒரு தளம் அமையவேண்டும். அதற்கு, இப்படியான முழுமை பெற்ற போகுதுபோக்குத் திரைப்படங்கள் தேவை.
3. படத்தில் எனக்கு முக்கியமாகப் பிடித்த. விதயம், எவ்விதத் தயக்கமும் இல்லாமல், வெகு இயல்பாக யாழ்ப்பாணத் தமிழில் உரையாடல் நடக்கிறது. வணிக வெற்றிக்கான பதற்றத்தில் இலங்கையின் வானொலி- தொலைக்காட்சிகளில் பயன்படுத்துவார்களே, அந்த வினோதமான, உலகிலேயே இல்லாத வடடார வழக்கைக் கையாளாமல், தன்னம்பிக்கையோடு யாழ்ப்பாணத் தமிழில் பேசுகிறார்கள்.
4. இயக்கம், இசை, பெரும்பாலான நடிகரின் நடிப்பு, காட்சி அமைப்புகள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே அற்புதம். உண்மையாக அக்கக்காகப் பிரித்து சிலாகித்து எழுத ஆரம்பித்தால் எவ்வளவோ எழுதலாம். மனநல விடுதியில் எல்லோரும் ஆடிப் பாடுவதாக ஒரு பாடல் இருக்கிறது. எல்லாமே அற்புதமாக அமைந்திருக்கும் சிறப்பான பாடல் ஒன்று.
அதுபோலவே படத்தின் நிறைய இடங்களில் இயக்குனரின் சீர்மை தெரிகிறது. பணத்தையோ நேரத்தையோ சேமிப்பதற்காக எந்தவொரு காட்சியின் நேர்த்தியையும் படத்திலே தியாகம் செய்யாமல் உழைத்திருக்கிறார்கள். உண்மையாகவே பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமே மிகுந்தது.
4. ராஜா திரையரங்கில் தொடர்ச்சியாகக் காடசிகள் திரையிடப்படுகின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்ப் பார்க்கிறார்கள். நீங்களும் சென்று கண்டு மகிழலாம். வாய்விட்டுச் சிரிக்கலாம், முழுமையாகப் படத்தோடு ஒன்றலாம்.
5. குறைகள் இருக்கிறதா? திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கிறது. அப்படி ஒன்றும் மோசமான குறைகள் இல்லை. அதுபற்றியெல்லாம் பின்னர் பேசலாம். இயல்பாக, engaging ஆக ஒரு சினிமா எடுத்திருக்கிறார்கள்.. நன்றாக இருந்தால் நம் மக்கள் உறுதியாகக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையில் பார்ப்போம், பிடித்திருந்தால் கொண்டாடுவோம்.. குறைகள் இருந்தால் சொல்லுவோம்.