சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National Council) தலைவர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை இன்று (19.12.2025) நேரில் சந்தித்துப் பேசினர்.
சந்திப்பு விவரங்கள்: இச்சந்திப்பானது சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள சீமான் அவர்களின் இல்லத்தில் இன்று காலை 9.00 மணியளவில் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், ஈழத்தமிழர் அரசியல் நிலவரம் குறித்து மிகத் தீவிரமாகவும், விரிவாகவும் ஆலோசிக்கப்பட்டது.
முக்கிய விவாதப் பொருட்கள்: இந்தச் சந்திப்பின் போது பிரதானமாக இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
-
‘ஏக்கிய ராஜ்ய’ நிராகரிப்பு: இலங்கையில் விரைவில் கொண்டுவரப்படவுள்ள ‘ஏக்கிய ராஜ்ய’ (Ekkiya Rajya) எனப்படும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை முழுமையாக நிராகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இது தமிழர்களின் நலனுக்கு எவ்விதத்திலும் தீர்வாகாது என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று சீமான் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
-
கடற்றொழிலாளர் பிரச்சினை: நீண்டகாலமாகத் தொடரும் ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களின் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட ஆவணங்கள்: இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியப் பேரவையினரால் தமிழக முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பேசப்பட்ட விடயங்கள் அடங்கிய எழுத்துமூல ஆவணங்களின் நகல்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடமும் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
பங்கேற்ற தலைவர்கள்: தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் இச்சந்திப்பில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள்:
-
திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (நாடாளுமன்ற உறுப்பினர் – தலைவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
-
திரு. பொ. ஐங்கரநேசன் (தலைவர் – தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்)
-
திரு. செல்வராசா கஜேந்திரன் (பொதுச் செயலாளர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
-
திரு. த. சுரேஸ் (தேசிய அமைப்பாளர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
-
திரு. கனகரத்தினம் சுகாஷ் (சிரேஷ்ட சட்டத்தரணி – உத்தியோகபூர்வப் பேச்சாளர்)
-
திரு. நடராஜா காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி – பிரச்சாரச் செயலாளர்)
சந்திப்பின் முக்கியத்துவம்: தமிழகத்தில் தமிழ்த்தேசிய அரசியலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தவரும், தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் தனது மூச்சிலும் பேச்சிலும் ஏந்தி நிற்பவருமான சீமான் அவர்களுடனான இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. “இந்திய அரசின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்ற நோக்கில் தமிழகக் கட்சிகளைச் சந்தித்து வரும் தமிழ்த் தேசியப் பேரவைக்கு, சீமான் உடனான இந்தச் சந்திப்பு உணர்வுப்பூர்வமான பலத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.
இதே நேரம் 18.12.2025 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஒழுங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் பின்னர் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் இந்தக்குழு சந்தித்தது . அவர்களிடமும் இதே கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகின்றது . தமிழக முதல்வரிடம் சமஷ்டி குறித்து பேசப்பட்டதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது .
#NaamTamilarKatchi | #Seeman | #GajendrakumarPonnambalam | #EelamTamils | #TamilNationalism | #StopEkkiyaRajya | #TamilNadu | #TamilEelam




















