அங்குருவத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாயையும் அவரது பதினொரு மாத பெண் குழந்தையையும் கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் நேற்று பிற்பகல் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வரகாகொட சல்கஸ் வத்த மாவத்தை பகுதியில் வசிக்கும் ஏ.ஏ.டி. பிரியாத் மதுரங்க என்பவராவார்.
அங்குருவாதோட்ட ஊருதுடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத குழந்தை டஸ்மி திலன்யா ஆகியோரை கொலை செய்தமை தொடர்பில், சந்தேகநபர் அகுருவாதோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாதக் குழந்தை ஆகியோர் கடந்த ஜூலை 18ஆம் திகதி மாலை முதல் காணாமல் போனதாக அவரது கணவர் அங்குருவத்தோட்ட பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினல் பிரதேசவாசிகளுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அவர்கள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. அவர்கள் இருவரின் உடல்களும் மிருகங்களால் கடுமையாக சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.