யமுனையில் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் யமுனையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் டெல்லிக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தலைநகர் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இன் நிலையில் டெல்லியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்துள்ளது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை எட்டியுள்ளது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.16 மீட்டர் ஆக உள்ளது.
உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து யமுனையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பதால் டெல்லியில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்துஎந்த நேரத்திலும் டெலிக்கு பாதிப்பு ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய நீர் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இமாச்சல பிரதேசம் உத்தரகாண்ட் உள்ளிட்ட யமுனையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் நதியின் நீர்மட்டத்தில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில், நாளை மறுநாள் வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. யமுனையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், டெல்லிக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வருவாய்த் துறை அமைச்சர் அதிஷி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.7 மீட்டருக்கு உயர்ந்தால் யமுனை நதியின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தார். டெல்லி மக்களை வெளியேற்றுவதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.