இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், 2-வது கூட்டம் பெங்களூரில் நேற்று முன்தினமும் நேற்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் முழுவேகத்தில் தேர்தலுக்கு தயராகி வரும் நிலையில், பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி நடத்தும் அதே நாளில் போட்டிக் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.
“DMK-வை திட்டும் ஆளுநரை நாங்கள் எதிர்க்க முடியாது”- Ponnaiyan, ADMK தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இந்தக் கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை வாசலுக்கே வந்து ஜேபி நட்டா வரவேற்றார். அது மட்டுமின்றி கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
இதனிடையே, பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பக்கத்தில் யார் யாரை எல்லாம் உட்கார வைத்திருந்தார்கள். பார்த்தீர்களா, அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களை பிரதமர் அரவணைத்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார். இந்நிலையில், இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என விமர்சித்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூட்டணி வைக்கிறோம். அது சூழலுக்கு ஏற்றவாறு வைப்பது. ஆனால், கொள்கை என்பது நிலையானது. அதிமுகவின் கொள்கையில் இருந்து நாங்கள் பிறழ மாட்டோம். பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை.
பாஜகவோடு திமுக கூட்டணி வைக்கவில்லையா? 1999ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது திமுக. திமுகவுக்கு இப்போது பாஜக தீண்டத்தகாத கட்சியா? அவர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் வளைந்து கொடுப்பார்கள். பச்சோந்தி மாதிரி நிறம் மாறிக்கொள்வார்கள். பிரதமர் மோடி தலைமையில் 9 ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை பார்க்க வேண்டும். கொரோனா காலம், அதற்குப் பிறகு உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழல் இருக்கும்போது, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது பாஜக அரசு. பிரதமர் மோடி உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். பாஜக கூட்டணியில் பெரிய சிறிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலில் 330 இடங்களில் வெற்றுபெறும் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.