ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் உட்பட சில டிஜிட்டல் கேட்ஜெட்களை Apple Wonderlust 2023 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த 1976-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது ஆப்பிள் நிறுவனம். ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோர் வணிக ரீதியாக இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆப்பிள் 1 கணினி. இதனை வோஸ்னியாக் வடிவமைத்திருந்தார். அடிப்படை கணினி கிட்டாக இது விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து கணினி மட்டுமல்லாது மொபைல் டிவைஸான ஐபோன், ஐபாட், Wearables அக்சஸரீஸ் என பலவற்றை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அதன் பின்னால் பல பொறியாளர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு பெயரை நிலை நிறுத்திக் கொண்டது. இதற்குக் காரணம் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எனவும் சொல்லலாம்.
தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதுப்புது மாடல் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது சில சாதனங்களை Wonderlust ஈவென்டில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிள் சாதனங்களை நேரடியாக அந்நிறுவனமே இந்தியாவில் விற்பனை செய்யும் முயற்சியாக மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஸ்டோர் நிறுவப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ், யுஎஸ்பி-சி போர்ட் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேரலையில் சுமார் 2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு இந்நிகழ்வு நடந்தது. ஆப்பிள் சிஇஓ டிம் குக் இதில் பங்கேற்றார். ஒவ்வொரு சாதனத்தையும், அதன் சிறப்பு அம்சங்களையும் ஆப்பிள் ஊழியர்கள் விரிவாக விளக்கி இருந்தார்கள். ஐபோன் 15 சீரிஸ் போன்கள் டிசைன்: வழக்கமான பாக்ஸ் வடிவிலான ஐபோன் டிசைனை ஐபோன் 15 சீரிஸ் போன்கள் கொண்டுள்ளன. இறுதியாக ஐபோனில் யுஎஸ்பி-சி டைப் போர்ட் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் Lightning போர்டுக்கு ஆப்பிள் விடை கொடுத்துள்ளது. இதற்கு பின்னணியில் ஐரோப்பிய யூனியனின் அழுத்தமும் அடங்கியுள்ளது. புரோ மாடலில் ஆக்ஷன் பட்டனை ஆப்பிள் ஐபோனில் சேர்த்துள்ளது. இதன் மூலம் எளிதில் சில அம்சங்களை பயனர்கள் அணுக முடியும் எனத் தெரிகிறது. சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்ப்ளே, டைனமிக் ஐலேண்ட் அம்சம் கொண்டுள்ளது. கேமராவும் பிரதான அப்டேட் கண்டுள்ளது.
ஐபோன் 15 & 15 பிளஸ் சிறப்பு அம்சங்கள்: 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது ஐபோன் 15 மாடல். 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது ஐபோன் 15 பிளஸ் மாடல். A16 பயோனிக் சிப்செட். பின்பக்கத்தில் ட்யூயல் கேமரா அமைப்பு. அதில் 48 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. ஃபேஸ் ஐடி, 4x ஆப்டிக்கல் ஜும் ரேஞ்ச், யுஎஸ்பி-சி போர்ட், எஸ்ஓஎஸ் கிராஷ் டிடெக்ஷன். ஐந்து வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜ் முதல் கிடைக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் ஐபோன் 15 சீரிஸ் போன்களை முன்பதிவு செய்யலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. 22-ம் தேதி முதல் போன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவித்துள்ளது.
ஐபோன் 15 மாடல் போனின் தொடக்க விலை ரூ.79,900. ஐபோன் 15 பிளஸ் மாடல் போனின் தொடக்க விலை ரூ.89,900. ஐபோன் 15 புரோ & 15 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்: டைட்டானியம் ஃப்ரேம் தான் புரோ மாடல் போன்களின் ஹைலைட். A17 புரோ சிப்செட் இதில் இடம்பெற்றுள்ளது. 3 நானோமீட்டர் ப்ராசஸ் சிப் என இது அறியப்படுகிறது. இதன் மூலம் பயனர்களின் கேமிங் அனுபவம் அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. 4 வண்ணங்களில் புரோ மாடல் வெளிவந்துள்ளது. புரோ கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. இதன் பிரதான கேமரா 48 மெகாபிக்சலை கொண்டுள்ளது. இதன் யுஎஸ்பி-சி போர்ட் யுஎஸ்பி 3 சப்போர்ட்டை கொண்டுள்ளது.
ஐபோன் 15 புரோ மாடல் போனின் தொடக்க விலை ரூ.1,34,900. ஐபோன் 150 புரோ மேக்ஸ் மாடலின் தொடக்க விலை ரூ.1,59,900.