நீண்ட காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று ஓயாத அலையாக உலகாளாவிய பேரனர்த்தமாக மிரட்டி ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பிற்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக தாயகம் திரும்பிய 62 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாள்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (15) உறுதி செய்யப்பட்டது.