ஜப்பான் நாட்டில் வினோதமான முறையில் சம்பாதிக்கும் இளைஞர். நமது நாட்டில் ஒரு வேலை கிடைத்து அதில் செட்டிலாவது என்பதே இளைஞர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் சும்மா இருப்பதையே ஒரு வேலையாக மாற்றி இருக்கிறார். இதில் அவருக்கு வருமானம் வேறு கொட்டுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அவர் இதுபோல சுமார் இலங்கை மதிப்பில் 2.4 கோடி ரூபாயைச் சம்பாதித்து இருக்கிறாராம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா எனச் சொல்லி ஒரு காட்சியில் நடித்திருப்பார். அது பார்க்கவே அவ்வளவு காமெடியாக இருக்கும்.
இது சினிமாவில் வேண்டுமானாலும் சாத்தியம். ஆனால், ரியல் வாழ்க்கையில் எப்படி சும்மா இருக்க முடியும் என்று நாம் யோசித்து இருப்போம். ஆனால், இங்கே ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் வேலையே செய்யாமல் சும்மா இருந்தே கோடிகளில் சம்பாதித்து வருகிறார். மாற்றி யோசித்த இளைஞர்: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ என்பவர் கடந்த 2018ம் ஆண்டு தனது வேலையை இழந்தார். அப்போது அவருக்கு வயது 35தான். உடனடியாக அவருக்கு வேலையும் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சில காலம் சும்மா இருந்த அவர், பின்னர் அதையே ஒரு வேலையாக மாற்றிவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா. அதாவது மோரிமோட்டோ தன்னை தானே வாடகைக்கு விட்டு வருகிறார். Rental do-nothing என்ற அடிப்படையில் இவர் தன்னை வாடகைக்கு விடுகிறார். அதாவது இவர் எந்தவொரு வேலையும் செய்ய மாட்டார். தன்னை வாடகைக்கு எடுப்போர் உடன் சும்மா இருப்பார். இதெல்லாம் ஒரு வேலையா.. இவரை யார் வாடகைக்கு எடுக்கப் போகிறார் என நீங்கள் கேட்கலாம்.
வருமானம் :
ஆனால், உண்மையில் ஜப்பானில் இப்போது தனிமை தான் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதனால் அங்குள்ள மக்களால் மற்றவர்களுடன் பேச முடியாத சூழலே நிலவுகிறது. இதனால் அங்குள்ளவர்கள் இவரைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாடகைக்கு எடுக்கிறார்களாம். இப்படியே கடந்த ஆண்டு மட்டும் மோரிமோட்டோ சுமார் $80,000 (அதாவது இலங்கை மதிப்பில் ரூ.2.4 கோடி ) சம்பாதித்து இருக்கிறார். இவரை வாடகைக்கு எடுக்கும் நபருடன் இவர் நண்பனைப் போல இருப்பார். எதாவது அவர்கள் பேசினால் பேசுவார். அவர்கள் புலம்பினால் அதையும் காது கொடுத்துக் கேட்பார். இப்படி அவரது வேலை ரொம்பவே எளிமையானது. அதாவது வாடகைக்கு எடுக்கும் போதே எதற்காக வாடகைக்கு எடுக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் கேட்டுக்கொள்வார். வாடகைக்கு எடுத்த பிறகு அதை மட்டுமே அவர் செய்வார். கூடுதலாக எந்தவொரு விஷயத்தையும் செய்ய மாட்டாராம்.
என்ன கண்டிஷன்?:
அதேநேரம் இதில் ஒரே ஒரு கண்டிஷனையும் அவர் வைத்திருக்கிறார். அதாவது என்ன நடந்தாலும் எந்தவொரு பாலியல் உறவுகளிலும் ஈடுபட முடியாது என்பதே அந்த கண்டிஷன் ஆகும். இவரை வாடகைக்கு எடுக்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் சுமார் 1,000 பேர் வரை இவரை வாடகைக்கு எடுக்கக் கேட்கிறார்களாம். இதற்கு முன்பு வரை அவர் 2-3 மணி நேரத்திற்கு $ 65 முதல் $ 195 வரை (ரூ.17,500 முதல் ரூ.59,500) வரை கட்டணம் வசூலித்து வருகிறார்.. கடந்தாண்டு மட்டும் இதுபோல இவருக்கு 80 ஆயிரம் டாலர் அதாவது ரூ.2.4 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது.