ஜெனிவாவில் 11ம்திகதி திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்ஆரம்பமானது.இக்குட்டத்தொடர் 13ம் இன்றுவரை தொடருகிறது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையும், அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் உரையும் இடம்பெற்றது. அதன்படி பேரவையில் உரையாற்றிய மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதி நிதிகளால் இலங்கை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டல், மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் வழங்கப்பட்டது.
இந்த தீர்மானம் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் மீளவலியுறுத்தப்பட்ட நிலையிலேயே, 54 ஆவது கூட்டத் தொடரில் இந்த தீர்மானம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாது என்ற போதிலும், இந்த முறை வெளியிடப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்கு மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே இலங்கையின் கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக தேசிய ரீதியில் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் குடிசார் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து விரிவான அறிக்கைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அரசியல் ரீதியான தன்முனைப்பின்மை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை என்பவற்றின் காரணமாக உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களைப் பாதிக்கக்கூடியவகையில் அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த விசனமடைகின்றோம். முறையான நீதிக்கட்டமைப்பின்றி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனையானது கடந்தகாலக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீண்டுமொரு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவது குறித்துக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாததன் விளைவாக, இத்தகைய ஆணைக்குழுக்களின்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள தமிழ்மக்களின் சில வழிபாட்டுத்தலங்கள் தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்படுவது குறித்தும், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக அவ்விடங்களில் பௌத்த சின்னங்கள் ஸ்தாபிக்கப்படுவது குறித்தும் நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம். இச்செயன்முறையை சீரமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன், குறித்தவொரு பகுதியை தொல்லியல் இடமாக அறிவிப்பதற்கு விஞ்ஞானபூர்வமான முறையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்று மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையின் பிரதிநிதி தெரிவித்தார்.
அரசியல் ரீதியான தன்முனைப்பின்மை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை என்பவற்றின் காரணமாக உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன. தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் உரியவாறான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவில்லை.
வட, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கு அரச அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் பயன்படுத்தப்படல், சிவில் செயற்பாடுகளில் மிகையான அளவில் படையினர் ஈடுபடுத்தப்படல் என்பன தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழி உள்ளடங்கலாக அனைத்து மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கின்றனர். இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஆகியவற்றின் மூலம் இப்பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்துவருகின்றன. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தினால் சிறுபான்மையினத் தமிழ்மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி கரிசனை வெளியிட்டார்.
அண்மையில் நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் மதவழிபாட்டுத்தலங்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகள் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மை நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தின. அதேபோன்று பெருமளவான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் ஆகியவற்றின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை என்று உலகளாவிய எவான்ஜலிகல் கூட்டணியின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.