பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை இரண்டாம் உலகப் போரின் போது லெனின்கிராட் மீதான நாஜி படை தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் ரஷ்ய அதிபர் புதின். மேலும், இஸ்ரேலை அவர் எச்சரித்தும் உள்ளார்.
கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் காசா நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தாக்குதலுக்கு பயந்து காசா நகரில் உள்ள மக்கள் தங்கள் உடமைகளுடன் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
தற்போது காசாவை தரைவழியாக தாக்குவதற்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. அதன் காரணமாக காசாவில் உள்ள சுமார் 11 லட்சத்துக்கும் மேலான அப்பாவி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளது. இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் விதமாக இஸ்ரேல் இதை முன்னெடுத்துள்ளது. இந்த சூழலில் புதின் இப்படி சொல்லியுள்ளார்.
“இஸ்ரேலின் இந்த நகர்வை ஏற்றுக்கொள்ளவே முடியாது. லெனின்கிராட் மீதான நாஜி படை தாக்குதலுக்கு இது நிகரானது. இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வழி காண வேண்டும். அதற்கான பணிகளை ரஷ்யா மேற்கொள்ளும்” என புதின் தெரிவித்துள்ளார்.