இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துயரங்களையும், நெருக்கடிகளையுமே அனுபவித்து வருகின்றனர்.
2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். அடுத்த வருடம் நிச்சயம் அதிபர் தேர்தல் இடம்பெறும். அதனைக் காலம் தாழ்த்தவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரம் இல்லை. மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கக் கூடிய ஆண்டாக 2024 அமையும்.
நாட்டை ஆதரிக்கின்ற, சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணர்கின்ற, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அறிவுள்ள, சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டியது மக்களுக்கு வழங்கப்படும் பொறுப்பாகும்.
மீண்டும் வர்த்தகர்களிடம் நாட்டைக் கையளிப்பதோ, குடும்ப ஆட்சியை மேற்கொள்பவர்களை அதிபராகத் தெரிவு செய்வதோ, பரம்பரையிலுள்ளவர்களை தெரிவு செய்வதோ நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும். எனவே மக்கள் அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
மக்களால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் ஏற்றுக்கொள்வோம். வரி அதிகரிப்பு காரணமாக மக்களுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளமை உண்மையாகும்.
எனினும் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் விரும்பி அதனை செய்யவில்லை. இதற்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கங்களால் இழைக்கப்பட்ட பாவங்களுக்கு விமோட்சனம் தேடும் நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த சுமையை நாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனில், எமது எதிர்காலம் நிரந்தரமாக கேள்விக்குறியாகிவிடும். அடுத்த வருடத்தின் முதல் இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளில் இந்த சுமையை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நிச்சயம் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதைக் கூற முடியாது. அது அதிபரின் முடிவுக்கமையவே இடம்பெறும்.