தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் ஓய்வின்றி உழைத்த உத்தமதளபதி லெப் கேணல் மங்களேஸ்.!
இயற் பெயர் : அரவிந்தன், தந்தைபெயர் : பாலசுந்தரம், சொந்த இடம் : யாழ் மாவட்டம், வீ.சாவு : 08/03/2008.
தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள்.
1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவது வயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது.
தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991ம் ஆண்டு யூலை மாதத்தில் ஆனையிறவுப் படைத்தளம் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆகாயக் கடல் வெளி’ நடவடிக்கையில் ஒரு போராளியாகப் பங்கெடுத்திருந்தவர். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் சிறிலங்காப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் நடவடிக்கையிலும் தனது போராற்றலை வெளிப்படுத்தியிருந்தார் மங்களேசண்ணா.
1992ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள் அணிக்கு பிரிவுமாற்றம் பெற்றுவந்த மங்களேசண்ணா வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைத்தொடர்ந்து கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் பிரதானதளமான சாலைத்தளத்தில் நின்று விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கின்ற பலம் சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கினார்.
அவரது ஆளுமையை இனம் கண்டுகொண்ட சூசை அவர்கள் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப்பகுதியில் மங்களேசண்ணா கடற்புலிகளின் வன்னி மாவட்டத் தளபதியாகவும் குறிப்பிட்டகாலம் செயற்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ் குடாநாடு முழுமையாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப் பகுதியிலும் ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த மங்களேசண்ணா 1996ம் ஆண்டு யூலை மாதத்தில் விடுதலைப்புலிகளால் ‘ஓயாதஅலைகள்-01’ எனப்பெயரிடப்பட்டு முல்லைத்தீவுப் படைத்தளத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிச்சமரின் போதும் படையினருக்கு உதவுவதற்காக கடல்வழியாக கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து குறித்த முல்லைப் படைத்தளம் வெற்றி கொள்ளப்படுவதற்கு மங்களேசண்ணாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் காத்திரமானது.
இதன் பின்னரான காலப்பகுதியில் மணலாறு, செம்மலையைத் தளமாகக்கொண்டு செயற்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி விநியோக அணிக்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட மங்களேசண்ணா அந்த விநியோக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்திருந்தார். குறித்த இந்த கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி நடவடிக்கையின்போது ஒரு சந்தர்ப்பத்தில் திருகோணமலை புடவைக்கட்டுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் மங்களேசண்ணா வயிற்றுப்பகுதியில் விழுப்புண்பட்டிருந்தார். தீவிர மருத்துவச் சிகீச்சைகளின் மூலம் தேறிய மங்களேசண்ணா மீண்டும் களப்பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கிழக்குமாகாண விநியோக நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தைத் தளமாகக்கொண்டு இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து எமது போராட்டடத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உபகரணங்கள் மற்றும் ஏனைய மூலவளங்களையும் கடல்வழியாகத் தாயகத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கின்ற உயரிய பணிகளையும் செவ்வனே செய்திருந்தார் மங்களேசண்ணா.
ஆழ்கடல் நடவடிக்கை கிழக்கு மாகாணத்திற்கான கடல் நடவடிக்கை மன்னார் – தமிழ்நாடு கடல்நடவடிக்கை என அனைத்து சவால்கள் நிறைந்த கடல் நடவடிக்கைகளிலும் பங்குகொண்டிருந்த மங்களேசண்ணா அந்த நடவடிக்கைகளில் பல கடற்சமர்களையும் கண்டிருந்தார்.
ஆனையிறவுப்படைத்தளத்தின் வெற்றிக்கு திறவுகோல்களாக அமைந்திருந்தன.
ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றிகொள்வதற்காக 26.03.2000 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின் போது வெற்றிலைக்கேணியைத் தளமாகக்கொண்டு தரையிறங்க வேண்டிய அணிகளை படகுகளில் ஏற்றி அனுப்புகின்ற பிரதான பொறுப்பாளராக மங்களேசண்ணா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
லெப் கேணல் பாக்கியண்ணாவின் உதவியோடு தரையிறங்கவேண்டிய ஆயிரத்துஇருநூறு போராளிகளையும் குறித்தநேரத்திற்குள் படகுகளில் ஏற்றி அனுப்பிவைத்து குடாரப்பு தரையிறக்க நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மங்களேசண்ணாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகவும் முக்கியமானது.
கடற்லிகளின் துணைத் தளபதியாகவும் பின்பு தரைத்தாக்குதல் பிரிவில் படையணித் தளபதியாகவும் சிறந்த ஒரு தளபதியாக பணியாற்றிவர்.
கடற்புலிகள் அணியினில் இணைந்ததிலிருந்து தனது கடமைகளின் ஊடாக படிப்படியாக உயர்ந்து போராளிகளின் மனதினில் இடம்பிடித்ததோடு… தளபதிகளின் மனங்களிலும் பதிவாகிப் போனதால் அவருக்குரிய தகுதிகளும் அவரைத் தேடியே வந்தது.
2000 ஆம் ஆண்டளவில் ஆணையிறவுப் பெருந்தளத்தை கைப்பற்ற குடாரப்புத் தரையிறக்கமே… வழி சமைதுதது. அந்த குடாரப்புத் தரையிறக்கத்தை பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் தலைமையிலான 1200 போரளிகளை எந்தவிதமான இழப்புக்களுமின்றி மிகவும் விவேகமாகவும்… நிதானமாகவும்… வெற்றிகரமாகத் தரையிறக்கம் செய்த கடற்புலிகளின் தளபதியே இவராவார்.
சிறிலங்கா படையினரின் தொலைதொடர்பினை விடுதலைப்புலிகள் இலகுவில் ஓட்டுகேட்டு கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரசு வெளிநாடு ஒன்றில் இருந்து ( பாகிஸ்தான்)நவீன ரக தொலைத்தொடர்பு கருவிகளை கொள்வனவு செய்து களமுனையில் படையினரின் செயற்பாட்டுக்காக பயன்பாட்டில் விட்டிருந்தது.இது ஒட்டுகேட்பது கடினமானதுதான்.ஆரம்பத்தில் இதனை உடறுத்து ஒட்டுகேட்பது என்பது முடியாததாகவே இருந்தது.
எனினும் குறிப்பிட்ட காலத்துக்குள் விடுதலை புலிகள் இதனையும் வெற்றி கொண்டு அதன் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதற்கேற்ப வகையில் ஓட்டு கேட்க துவங்கினார்கள்.அதனை எவ்வாறு கண்டறிந்தார்கள் என்றால்,பாகிஸ்தான் வழங்கியிருந்த தொலைத்தொடர்பு கருவியினை சிறிலங்கா படையினர் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்து பயன்படுத்த தொடங்கினார்கள்.அதாவது சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதிகளுக்குள் வந்து தாக்குதலை நடத்தும் போது,இவ்வாறு ஓட்டுகேட்க்க முடியாத கருவிகளை பயன்படுத்த தொடங்கினார்கள் இந்த நிலையில் ஆழ உடுருவும் அணியின் தாக்குதல் ஒன்றினை வவுனியா புளியங்குளம் பகுதிக்கு அண்மையாக விடுதலைப்புலிகள் முறியடித்து இருந்தனர்.
இதன்போது ஆழ உடுருவும் படையினரின் சடலம் ஒன்று வெடிபொருட்கள் என்பனவற்றுடன் பாகிஸ்தான் வழங்கிய புதிய தொலைத்தொடர்பு கருவியும் புலிகள் வசம் வந்து சேர்ந்தது.அதனை பார்த்தபோது புலிகளுக்கு ஆச்சரியமாகி போனது,ஏனெனில் நவீன தொலைத்தொடர்பு கருவி என்று சிறிலங்காவிற்கு பாகிஸ்தான் வழங்கிய அந்த தொடர்பாடல் கருவிகளை சிறிலங்கா பாவனைக்கு கொண்டுவருவதற்கு முன்னரே விடுதலைப்புலிகள் தமது பாவனையில் வைத்திருந்தனர்.உடனடியாக அதன் தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு ஒட்டுகேட்க முடியாது என்று கருதிய பாகிஸ்தான் தொடர்பாடல் கருவியில் உரையாடிய படையினரின் உரையாடல்களையும் போராளிகள் ஒட்டுகேட்க தொடங்கினார்கள்.
இதேவேளை தென்னிலங்கையில் தாக்குதலுக்கான பொருட்கள்,நகர்வுகள், மன்னார் கடல்வழியாகவே நகர்த்த படுகின்றன.என ஏற்கனவே பார்த்திருந்தோம் கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவுக்கு பின் மங்களேஸ் அவர்களிடம் சில பணிகள் கொடுக்கபடுகின்றன.இதனைவிட இவர் திருக்கேதீஸ்வரம் கட்டளைத்தளபதியகவும் செயற்பட்டு கொண்டிருந்தார்.இவரது முதன்மையான கட்டளை மையம் அடம்பன் மாகவித்தியலத்திற்கு அருகாமையில் காணப்பட்டது.கடற்புலி போராளிகளை வைத்தே திருக்கேதீஸ்வரம் பகுதி எதிர்த்தாக்குதல் நடைபெறுகிறது.இவருக்கு கீழ்தான் பொறுப்பாளர் காதர் அவர்களும் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.
இவ்வாறுதான் அன்று திருக்கேதீஸ்வரம் பகுதியில் விடுதலைபுலிகளின் காவலரண் ஒன்றை எதிரி கைப்பற்றி விட்டான்.இதில் போராளிகள் பலர் வீரச்சாவு அடைகின்றார்கள்.இக்காவலரண் மீட்பதுக்கான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தி மீட்கிறார்கள்.இதன்போது விடுதலைபுலிகளின் காவலரணில் நின்ற சிறிலங்கா படையினர் சில நரிவேலைகளை செய்திருந்தார்கள்.காவலரண் முன் சிறிலங்கா படையினருக்கு வைத்த மிதிவெடிகளை சிறிலங்கா படையினர் எடுத்து அந்த காவலரணில் வாசல்கள் ,உள்வந்து இருக்கும் இடம் அதற்க்கு பின்புள்ள விடுதலைப்புலிகள் நடமாட்ட பாதை போன்ற இடங்களில் புதைக்கிறார்கள்.புலிகளின் நடமாட்ட பாதையில் சிறிலங்கா படையினர் புதைத்துவிட்டு போன மிதிவெடியில் மங்களேஸ் கால் வைக்கிறார்.மிதிவெடியில் கால்பட்டு கீழே விழும்போது,அருகில் புதைத்து வைக்கபட்டிருந்த இன்னொரு மிதிவெடியில் உடம்பு விழ அதுவும் வெடிக்க லெப்.கேணல் .மங்களேஸ் அந்த இடத்துலயே வீரச்சாவை தழுவி கொள்ளுகிறார்.