“13 ஆண்டுகளாக அப்பா எப்போது வருவார் என்று என் பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்”
“எனது கணவரின் மரணச் சான்றிதழை வாங்கிப் போகச் சொல்கிறார்கள். அது எனக்குத் தேவையில்லை”
“முள்ளிவாய்க்காலில் இயக்கத்திடம் கொடுத்திருந்தாலோ, இறந்திருந்தாலோ கூட எனக்குக் கவலையில்லை. பொதுமன்னிப்பு என்று கூறி ராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு என்ன நடந்தது என்று அரசு கூற வேண்டும்”
தனது கணவரைப் பற்றிப் பேசும்போது சச்சிதானந்தம் பத்மரஞ்சனிக்கு அவ்வப்போது கண்கள் கலங்கிவிடுகின்றன. சில தருணங்களில் வார்த்தைகள் இல்லாமல் பேச்சை நிறுத்திவிடுகிறார்.
இலங்கை இறுதிப் போரின்போது ராணுவத்திடம் சரணடைந்த பிறகு திரும்பி வராத ஏராளமானோரில் பத்மரஞ்சனியின் கணவரும் ஒருவர்.
2009ஆம் ஆண்டு வரை இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் கணவருடன் பங்கேற்றிருந்ததாகக் கூறும் பத்ம ரஞ்சனி, 2009ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு ஓராண்டு காலம் அரசின் தடுப்பு முகாம்களில் தனது இரு குழந்தைகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“மே 17ஆம் தேதி ராணுவத்திடம் சரணடையலாம் என்று நான் கூறிய போது எனது கணவர் வேண்டாம் என்றார். நான் வற்புறுத்திய பிறகு வெள்ளைக் கொடியை எடுத்துக் கொண்டு மக்களுடன் ராணுவத்தை நோக்கிச் சென்றோம். [முள்ளிவாய்க்கால்] வட்டுவாகல் பாலத்தில்தான் அவரை ராணுவத்திடம் ஒப்படைத்தேன்”
ராணுவத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டோருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்போவதாக அறிவித்ததை நம்பித்தான் அவரை சரணடையுமாறு கூறியதாக பத்மரஞ்சனி தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வுகளில் பங்கேற்கும் பத்மரஞ்சனி, தனது கணவர் இன்னும் உயிருடன் எங்கோ இருப்பதாக நம்புகிறார். அதற்கும் காரணம் உண்டு. போர் முடிந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட பலர் வீடுகளுக்குத் திரும்பி வந்திருக்கின்றனர்.
பத்மரஞ்சனிக்கு இரண்டு குழந்தைகள். இப்போது மாடுகள் வைத்து விவசாயம் செய்துவருகிறார். தன்னை இன்றுவரை அரசு கண்காணித்து வருவதாகவும், அவ்வப்போது காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
பத்மரஞ்சனியைப் போலவே ரஞ்சனிதேவியும் 13 ஆண்டுகளாக ஒரே நம்பிக்கையுடன் இருக்கிறார். கணவர், அவருடைய சகோதரர், தனது இருசகோதரர்கள் என தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை ரஞ்சனி தேவி தேடிக் கொண்டிருக்கிறார்.
“4 பேரும் காணாமல் போனதாக நாங்கள் கூற மாட்டோம். சரணடைந்தார்கள் என்றுதான் கூற வேண்டும்”
“மே 17-ஆம் தேதி செஞ்சிலுவைச் சங்கம் அழைப்பதாக வந்த தகவலின்பேரில்தான் முள்ளிவாய்க்காலில் இருந்து நாங்கள் சரணடையச் சென்றோம். ஆனால் மே 18-ஆம் தேதி நாங்கள் வட்டுவாகல் பாலத்துக்குச் சென்றபோது அங்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாரும் இல்லை. ராணுவத்தினர்தான் எங்களை அழைத்துச் சென்று ஒரு மைதானத்தில் அடைத்து வைத்தார்கள். அதில் லட்சக்கணக்கான மக்கள் இருந்தார்கள்”
குடும்ப உறுப்பினர்களை எங்களிடம் இருந்து தனியே பிரித்துச் சென்றபோது விசாரித்து விட்டுவிடுவார்கள் என்றே நினைத்ததாகவும், ஆனால் இன்று வரை அவர்கள் யாரும் திரும்பிவரவில்லை என்றும் ரஞ்சனி தேவி கூறுகிறார்.
“கணவர் சரணடைந்தபோது நான் கருவுற்றிருந்தேன். முகாமில்தான் குழந்தையைப் பெற்றெடுத்தேன்”
“பல்வேறு தடுப்பு முகாம்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். பல தடுப்பு முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை நான்கு பேரையும் பார்க்க முடியவில்லை” என்கிறார்.
வருமானத்துக்காக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார் ரஞ்சனி தேவி.
காவலர்கள் இப்போதும் தம்மை விசாரிக்க வருவதால், தனது குடும்ப உறுப்பினர்கள் எங்கோ இருக்கிறார்கள் எனக் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
சரணடைந்து திரும்பி வராதோரின் உறவினர்கள் பலர் குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
புதுக்குடியிருப்புக்கு அருகேயுள்ள பகுதியில் தனியாக வசித்து வரும் தங்கவேல் சத்தியதேவி, தனது மகள், மருமகன், மூன்று குழந்தைகள் என ஐந்து பேரைக் காணாத துயரத்தில் இருக்கிறார். அதே மே 18-ஆம் தேதி ராணுவத்திடம் அனைவரும் சரணடைந்ததாகவும் அதன் பிறகு அவர்கள் யாரையும் காணவில்லை என்றும் சத்யதேவி கூறுகிறார்.
“எல்லோரும்தான் சரணடைந்தோம். ஆனால் ராணுவத்தினர் என்னை அனுப்பி விட்டனர். எனது மகள், மருமகன், குழந்தைகள் அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றினார்கள். அதுதான் அவர்களை நான் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு அவர்களைக் காணவுமில்லை. எங்கிருக்கிறார்கள் என்று விவரமும் தெரியவில்லை”
சத்யதேவியின் மருமகன் பெயர் சின்னத்தம்பி மகாலிங்கம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் இருந்தார். மகள் சிவாஜினி. ராணுவத்திடம் சரணடையும்போது மூத்த குழந்தை மகிழினிக்கு 10 வயது. இரண்டாவது குழந்தை தமிழொளிக்கு 9 வயது. கடைசிக் குழந்தை எழிலினிக்கு 2 வயது.
“போரின் கடைசி நாள்களில் உண்ண உணவும், குடிக்க நீரும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லை. குழந்தைகள் எவ்வளவு பசியோடு இருந்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்” என்கிறார் சத்யதேவி.
“அவர்கள் அனைவரும் எங்கோ இருக்கிறார்கள். வந்துவிடுவார்கள் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் சத்யதேவி.
போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்புகள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசிடமும், மனித உரிமை அமைப்புகளிடமும் அவை தொடர்ந்து முறையிட்டுக் கொண்டிருக்கின்றன.
பிபிசி தமிழிடம் பேசிய மூன்று பெண்களும் அரசுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அனுப்பிய பல கடிதங்களையும், பதில் கடிதங்களையும் வைத்திருக்கிறார்கள்.
எங்கெல்லாம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சென்று பேசுவதன் மூலம் தங்களது சொந்தங்களை மீட்க முடியும் என்று நம்புவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
வணக்கம்