முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது. விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துரைக்கையில் , மிகப்பெரிய அடாவடிகளுக்கு மத்தியில் குவிக்கப்பட்ட காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினருக்கு மத்தியில் குருந்தூர் மலை யினை ஆக்கிரமித்திருக்கின்ற பிக்குவின் அடாவடிகள் ஆக்கிரமிப்புக்களுக்கு மத்தியில் எல்லோரின் ஒத்துழைப்புடனும் இந்தப் பொங்கல் நிகழ்வு நிறைவுபெற்றுள்ளது.
பல்வேறு பட்ட தடைகள் இருந்தும் தடைகளை தாண்டி நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறையினுடைய நியாயமான கரிசனைகள் எண்ணத்தில் எடுக்கப்பட்டு , நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த பொங்கலுக்காக எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
இது தமிழர்களின் இருப்பினையும் எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியுள்ளது.ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக அனைத்து தமிழர்களும் இணைந்துவந்து எம்பெருமான் சிவனுக்குரிய அரோகரா என்ற நாமத்துடன் பொங்கல் நிகழ்வினை முன்னெடுத்துள்ளோம்.
இந்த பொங்கல் நிகழ்வு தொடர்ந்து மாதாமாதம் நடைபெறும் அதேவேளை மக்களின் இருப்பினையும் அடையாளங்களை பேணும் வகையிலும் எங்கள் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இடத்தில் பாரம்பரியமான வரலாற்று புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் எல்லோரும் இணைந்து முன்னெடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.