23ஆண்டுகளின் பின் அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழக முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற சிவன்கோவில் இருந்தது. அந்த கோவிலை அலாவூதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் என்பவர் படை எடுத்து சிதைத்து விட்டான். அதனால் அந்த கோவில் இருந்த இடம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் எருக்கஞ்செடி மற்றும் முட்புதர்களால் நிறைந்திருந்தன.
முற்றிலுமாக சிதிலமடைந்த கோவிலில் எஞ்சிய நிலையில் பிரம்மா , சண்டிகேஸ்வரர் , முருகன் , அக்னி , வருணலிங்கம் , சோமாஸ்கந்தர் , துர்கை , சேஷ்டா தேவி , சங்கநிதி பத்மதேலி , வழிபாட்டு நந்தி , பிரகார நந்தி ,மற்றும் கருவறை லிங்கம் ஆகிய கற்சிலை மண்ணில் புதைந்த நிலையில் சிதைந்து இருந்துள்ளது. அந்த சிலைகளை ஊர் பொதுமக்கள் கடந்த 1998 ஆம் ஆண்டு சேகரித்து வழிபட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், கடந்த 1999 முதல் 2000 ஆண்டு காலகட்டத்தில் அங்கிருந்த தொன்மை வாய்ந்த முழுமையான முருகன் சிலையை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். அந்நேரத்தில் சிலை காணாமல் போனதை அபசகுனமாக கருதிய ஊர் மக்கள் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை. சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோயிலில் இருந்து திருட்டுப்போன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உலோக சிலைகளை போலீசார் கண்டுபிடித்து பக்தர்களின் வழிபாட்டிற்கு ஒப்படைத்தார்கள்.
அதை போன்றே தங்கள் ஊரில் இருந்து திருடுபோன தொன்மையான நின்ற நிலையில் இருந்த முருகள் கற்சிலையை கண்டுபிடித்து வழிப்பாட்டுக்கு தருமாறு ஊர் பெரியவர் பெரியசாமி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் காணாமல் போன முருகன் சிலையானது 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் ஆட்சி காலத்திய சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்த சிலைகளை ஒப்பீடு செய்து தற்போது இந்த சிலையை கண்டுபிடித்துள்ளனர்.குறிப்பாக, சிலை காணாமல் போன பிறகு சிலையை ஒப்பீடு செய்வதற்கான எந்த வித புகைப்படங்களும், தடயங்களும் இல்லாமல் இருந்ததால் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் “தடயம்” என்ற ஆன்மீக புத்தகத்தில் இந்த கோவில் பற்றியும் முருகன் சிலை பற்றியும் புகைப்படங்களோடு கூடிய செய்தி குறிப்புகள் இருந்தது. இதனை கண்டறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களோடு சிலை ஒப்பீடு செய்துள்ளனர்.
தற்போது இந்த சிலையை தமிழகத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.