கடந்த வெள்ளிக்கிழமை (6) தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்து தேசிய மற்றும் சமூக மட்டத்திலான பிரச்சினைகள் குறித்து பரந்துபட்ட அடிப்படையில் கலந்துரையாடியிருந்தனர்.
அதேவேளை தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் தமது சமூகம் கொண்டிருக்கும் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அப்பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் அராபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிவதாகவும், வருடாந்தம் வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் பணத்தில் அவர்களது பங்களிப்பு 85 சதவீதமாகக் காணப்படுவதாகவும் டில்வின் சில்வாவிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே இந்நாடுகளுடன் வலுவான தொடர்பைப் பேணவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தனர்.
இதன்போது பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக தெரிவித்த அப்பிரதிநிதிகள், முன்னுரிமை வழங்கி தீர்வுகாணப்படவேண்டிய 27 விடயங்களை உள்ளடக்கி தாம் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வழங்கியிருந்த ஆவணத்தை டில்வின் சில்வாவிடம் கையளித்தனர்.
அதேபோன்று கல்வி, பொருளாதாரம், அரசியல் உள்ளடங்கலாக நாட்டின் சகல துறைகளுக்கும் அவசியமான பங்களிப்பை வழங்கக்கூடிய அறிவும் திறனும் உடைய பலர் முஸ்லிம் சமூகத்துக்குள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்தோடு நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விதமாக சமூக மட்டத்திலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.