கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு!
மற்ற கட்சியிலிருப்பவர்களை தங்கள் கட்சிக்கு வலைவீசி பாஜக இழுத்து வரும்நிலையில், பாஜகவிலிருந்து ஒருவர் சீமான் கட்சிக்கு சென்றுள்ளார்.. இன்று அதற்கான கிளைமேக்ஸூம் நடந்து விட்டது.
தமிழக அதிரடிப் படையால் கடந்த 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், வித்யாராணி 4 வருடங்களுக்கு முன்பு, அரசியலுக்குள் என்ட்ரி தந்திருந்தார்.. அதிலும் பாஜகவுக்குள் நுழைந்திருந்தது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது, மாநில தலைவராக எல்.முருகன் பொறுப்பில் இருந்தபோது, ஏராளமான பிரபலங்கள், பிரமுகர்கள், தமிழக பாஜகவில் இணைந்தனர்.
அரசியல் பின்புலம் இல்லாதவர்கள், அரசியல் அனுபவமும் இல்லாதவர்கள், அதே சமயம் மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை, தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தமிழக பாஜக அந்த சமயத்தில் தீவிரமாகவே மேற்கொண்டிருந்தது.. அப்போதுதான், “சரவணபவன்” ஜீவஜோதி கட்சியில் இணைந்திருந்தார்.. அதேவேகத்தில், சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணியும் இணைந்திருந்தார்..
கட்சியில் சேர்ந்ததுமே, பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் வித்யாராணி நியமிக்கப்பட்டார். கட்சியில் இணைந்தது பற்றி வித்யாராணி சொன்னபோது, “மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் எண்ணம்.. தப்பான வழியை தேர்வு செய்திருந்தாலும் சேவை செய்வதுதான் அவரது எண்ணமாக இருந்தது.. அதேபோல, மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்யவே பாஜகவில் இணைந்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்..
இந்த 4 ஆண்டுகளும் பாஜகவிலேயே தீவிரமாக செயல்பட்டு வந்தார் வித்யாராணி.. ஆனால், தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்.. கடைசிவரை அவருக்குரிய இடம் கிடைக்கவில்லை.. இதனால் அதிருப்திக்குள்ளான வித்யாராணி, பாஜக கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்ளாமலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் எம்பி தேர்தலை முன்னிட்டு மீண்டும், அவரது அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன.. அந்தவகையில், கடந்த மாதம் திடீரென நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து பேசியிருந்தது, பரபரப்பை உண்டுபண்ணியது..
பாஜக பிரமுகர் எதற்காக சீமானை சந்தித்து பேச வேண்டும்? என்ற சந்தேகமும் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன.. ஆனால் வித்யாராணி, நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக உள்ளதாக கூறி, நிலவிவந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அப்போதுதான், நாம் தமிழர் கட்சியில் வித்யாராணி இணைந்த விஷயமே தெரியவந்தது.. ஆனால், இவரை மறுபடியும் பாஜகவில் செயல்பட வைக்க சிலர் முயற்சி செய்தும்கூட, வித்யாதாரணி அதற்கு பிடிகொடுக்கவில்லையாம்..
வரப்போகும் தேர்தலில் வழக்கம்போல், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.. வழக்கம்போல் “சிங்கம்” சிங்கிளாகவே களமிறங்குகிறது.. சின்னம் விவகாரமும் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் இன்றைய தினம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அந்தவகையில், வித்யாராணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் உறுதியானது. கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இன்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீமான் அறிவித்தார். இதன்மூலம் கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி நாம் தமிழர் சார்பில் போட்டியிடுவது உறுதியாகவிட்டது.