நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில் சேரப் போகிறார் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் காளியம்மாள். எதற்கும் இருக்கட்டுமே என்று மூன்றாவது கட்சி ஒன்றிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியில் தமிழகம் முழுவதும் அறிந்த முகங்களில் சிலர் மட்டுமே குறிப்பிடத்தக்கவர்கள். சீமானுக்கு அடுத்தபடியாக ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், சாட்டை துரைமுருகன், காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோர் இருந்து வந்தனர் .
இதில் ஏற்கனவே ராஜீவ் காந்தி திமுகவிலும், கல்யாணசுந்தரம் அதிமுகவிலும் தஞ்சம் புகுந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது.
இதை அடுத்து காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் வெளியாகி வந்தது.
அதுவரை அமைதி காத்த காளியம்மாள் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
குறிப்பாக நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்ட பிறகு தான் அவரது விலகல் அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காளியம்மாள் போட்டியிட்டு இருந்தார் . அவரது பிரச்சாரம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் ஓரளவு வாக்கு வங்கியும் கிடைத்தது. இந்த நிலையில் சீமான் உடனான மோதல் காரணமாக கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அவர் இடையே விஜய் கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைவார் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவுக்கு சென்ற ராஜீவ் காந்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்திய காளியம்மாள் திமுகவில் இணைய இருக்கிறார் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் காளியம்மாள் விதித்த சில நிபந்தனைகளுக்கு திமுக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் செய்த சில வேலைகள் திமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்ததால் அவரிடம் கெஞ்ச வேண்டாம் அவராகவே ஒரு முடிவுக்கு வரட்டும் யாரும் பேச வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகளிடம் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிவிட்டாராம்.
காரணம் காளியம்மன் தொலைபேசியை நிறுத்தி வைத்திருக்கும் இருக்கும் நிலையில், முன்னாள் தம்பிகள் உதவியுடன் திமுக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் ராஜீவ் காந்தி மூலமாக அன்பில் மகேஷை நேரில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
மேலும் எதற்கும் இருக்கட்டும் என அதிமுக தரப்பிலும் துண்டு போட்டு வைக்கும் விதமாக கல்யாணசுந்தரம் மூலம் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த திமுக தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த காளியம்மாள் அந்த கட்சியில் சேர்ந்தால் பழைய வீடியோக்களை போட்டு நாம் தமிழர் கட்சியினர் விமர்சிப்பார்கள். எனவே அதிமுக அல்லது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்றும் காளியம்மாள் நினைக்கிறார்.
அதனால்தான் கட்சி பிரிவு அறிவிப்பு வந்திருந்தாலும் எந்த கட்சியில் சேரப் போகிறார் என்று அறிவிப்பு வரவில்லை. எல்லோரும் எதிர்பார்ப்பது போல திமுகவில் இணைவாரா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணைவாரா என்பது தான் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதற்கு விடை கிடைத்துவிடும் என்கின்றனர் நாம் தமிழர் முன்னாள் தம்பிகள்.