10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (17) நேற்று பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெற்றுளது. சபாநாயகர் பதவிக்கு ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி சார்பில் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் பதவிக்கு முன்மொழிவதாக குறிப்பிடப்பட்டது.
கல்வி தகைமை விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக்க சபுமல் ரன்வல கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது பதவியை இராஜினாமா செய்தார்.
சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குணநாயக்க பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீரவுக்கு உத்தியோகபூர்வமாக சனிக்கிழமை (14) அறிவித்துள்ளார்.
இதற்கமைய சிறந்த மற்றும் சிரேஷ்டத்துவமிக்க ஒருவரை புதிய சபாநாயகராக தெரிவு செய்ய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியது.
இவ்வாறான நிலையில் சபாநாயகர் பதவிக்கு ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களும், பிரதி சபாநாயகர் வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி ஆகியோரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை.புதிய சபாநாயகர் எவ்வாறானவர் என்று குறிப்பிட முடியாது என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
புதிய சபாநாயகர் தெரிவில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புதிய சபாநாயகர் தெரிவை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.