தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. நேற்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, ருத்ராட்சம், விபூதி பட்டையுடன் மத சின்ன அடையாளத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார் தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை.சனாதனத்துக்கு ஆதரவாக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திராவிட மொடல் ஆட்சியை முன்னிறுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது.
திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து சனாதன துறவி என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையான நிலையில், பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவும் விவாதப்பொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் திருவள்ளுவரின் படத்தை வழக்கமான தோற்றத்திலிருந்து மாற்றி காவி உடை தரித்தவராக தமிழ்நாடு பா.ஜ.க முயற்சி செய்துவருகிறது. அதனடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் முதன்முதலாக காவி உடை அணிந்த திருவள்ளுர் படத்தை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனாலும் தொடர்ந்து பா.ஜ.கவினர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பல அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
உலகப் பொதுமறை தந்தவர் வள்ளுவர், அவரையும் குறளையும் வைத்து அரசியல் செய்யாதீர்கள் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசக்கூடாது எனக் கண்டித்தனர். அனைத்துத் தரப்பு மக்களாலும் நாடு, மதம், மொழி, இனம் கடந்து திருக்குறள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று நடுநிலையாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திருவள்ளுவருக்கு காவியுடை அணிவித்ததை பலரும் ஆட்சேபித்துள்ளனர்.