ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு ‘ரிட்’ மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனு மீதான விசாரணை வருகின்ற 02.10.2023 அன்று விசாரணைக்கு வருகின்றது.
அந்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விடுதலையாகியுள்ள நான் கடந்த பத்து மாதங்களாக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். இலங்கையில் உள்ள எனது வயதான தாயாரை பார்க்க போக முடியவில்லை. என்னை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய அரசு இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது தாயாரின் வயோதிக காலத்தில் அவரை பார்ப்பதற்கு என்னை விரைவாக இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசும் தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாந்தனின் சார்பாக மூத்த வழக்குரைஞர் பா.புகழேந்தி ஆஜராக உள்ளார். இது குறித்து வழக்குரைஞர் பா.புகழேந்தி அவர்களிடம் கேட்ட போது, தனது சொந்த நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் மற்றும் உள்துறை செயலர் போன்றோருக்கு பல மனுக்களை சாந்தன் வழங்கியும் எந்த பதிலும் வழங்கப்படாமையால் உயர் நீதிமன்றத்தினூடாக அனுமதி பெறுவதற்கு சாந்தன் முயற்சி செய்துள்ளார் என்று குறிப்பிட்டார். அத்துடன், நீதிமன்றம் அவருக்கு உண்டான சட்ட சரியான நீதியினை வழங்கும் என்றும் தெரிவித்தார்.