ஆசியாவில் அரிசி விலை வேகமாக அதிகரித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே மிக அதிக விலையேற்றமாகும்.
உலக நாடுகளுக்கு மிக அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யும் இந்தியாவும் தாய்லாந்தும் அவற்றின் ஏற்றுமதி அளவைக் குறைத்துள்ளன. வறட்சியால் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசியான் சந்தையில் ஒருவகை தாய்லாந்து அரிசியின் விலை தொன்னுக்கு கிட்டத்தட்ட 650 டொலரைத் தொட்டதாகத் தாய்லாந்து அரிசி ஏற்றுமதிச் சங்கம் கூறியது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் பில்லியன் கணக்கான மக்களின் அடிப்படை உணவு அரிசியாக உள்ளது.
அரிசி விலை ஏற்றம் ஏற்கனவே உள்ள பணவீக்கத்தின் பாதிப்பை மோசமாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அரிசி விநியோகம் குறித்த கவலையும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா பாஸ்மதி அல்லாத மற்ற வெள்ளை அரிசி வகைகளின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. வறட்சியைச் சமாளிக்கக் குறைந்த அளவு தண்ணீரில் விளையும் வேறு பயிர்களை வளர்க்கும்படி விவசாயிகளிடம் தாய்லாந்து வலியுறுத்தியுள்ளது.