ஒரு தாயின் கதறல்😭
அறியாத பருவத்தில
தெரியாம விளைந்த வினை
பறிபோன உயிருக்கு
பலி சுமந்த என் மகனே….
தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி
வாய்விட்டு நடந்ததை வாதிட ஆசைப்பட்டான்!
அம்மாநான் வர்றேன்னதும் வாசலிலே
குந்திருந்தியிருந்தேன்
எம்புள்ள முகம்பார்க்க வழிமீது விழிவைத்திருந்தேன்!
ஆத்தா கையால சோறு கேட்டானே….
நேத்திவைச்சு தாய்மடியில் கண்ணுறங்க
ஆசைப்பட்டானே!
ஊருக்கு வர்றேன்னு சொன்னாயே என்மகனே…
பாரும்மா உயிரோடு வருவேன்னு
சொல்லலையே!
பல்லக்குல வருவான்னு பாவிமக
நினைச்சனே
சொல்லு கெட்டதையா
பிணமாக வந்தாயே!
சந்தோசம் தாங்காம சமாதி ஆனாயோ…
சொந்த மண்ணை முத்தமிட செத்தும்நீ
வந்தாயோ!
வெற்றுப்பையை கட்டிப்பிடித்து வீட்டுக்குப்
போறேன்னு உற்றுப் பார்த்திருக்க
புத்திகெட்டு போனதா ஐயா!
விம்மி விம்மி அழுதிருப்பான் விசவார்த்தையை நம்பியிருப்பான்
தெம்பும் இல்லாமலே திகைத்தும் இறந்திருப்பான்!
கண்ணுக்குள் பெத்தவள கனவா வச்சிருந்தான்…
மண்ணுக்குள் போகவா மகனே உனைஈன்றேன்!
பெற்றவையிறு இங்கு பற்றி எரியுதையா
சுற்றம் பலருண்டு கொல்லிபோட நீயில்லையே!
உன்னைஉயிரா பார்க்கத்தான் ஒத்தஉசுர
வைச்சியிருந்தேன்
என்னை அனாதையாய் ஆக்கிவிட்டு
போயிட்டியே!
தாயகமே தமிழகமே தனிமரமாய் ஆனேனே
சேயவனைய் உயிரோடு உறவுக்கு தரவில்லையே!
சாந்தன் அண்ணா அவர்களின்
நல்ல ஆத்மா உடலால் அமைதி காணட்டும்.
-அபிராமி கவிதன்.