என்றும் மறக்க முடியாத நாள் ஜூலை 23, இன்று, புனிதமான கறுப்பு ஜூலையின் 40ஆம் ஆண்டின் நிறைவை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூறும் முகமாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இவ்வினப்படுகொலையின் நீடித்த தாக்கத்தை பிரதிபலிக்கும் முகமாகவும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
1983ம் ஆண்டு ஜூலை 23 இலிருந்து, ஜூலை 30 வரை அரச ஆதரவுடனான சிங்களக் காடையர்கள் 18,000 தமிழர் வீடுகளை அழித்ததுடன் 3,000 தமிழர்களை உயிரோடு எரித்தும் வெட்டியும் சுட்டும் கொலை செய்து ரசித்தனர். 5,000 தமிழ் வணிக வளாகங்களை எரித்து நாசமாக்கியது . சிங்கள பௌத்தகாடையர்கள் , பல தமிழ் பெண்களை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரத்திற்குள் 90,000இலிருந்து 150,000 தமிழர்கள் உடுத்த உடையுடன் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
நான்கு தசாப்தங்களுக்குப் பின்பும் கறுப்பு ஜூலைக்கான தண்டனை வழங்கப்படாத நிலையே தொடர்கிறது. எந்தவொரு தனிநபரோ, அல்லது இலங்கை அரசோ கறுப்பு ஜூலையின் போது நடந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்கவில்லை. இவ்வாறான பொறுப்புக்கூறாத்தன்மையே, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உட்பட மேலும் பல மனித உரிமை மீறல் குற்றங்களை செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு தைரியத்தை வழங்கியது. இதில் கணக்கில் வராத பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட, அல்லது கொல்லப்பட்ட 70,000 இலிருந்து 169,796 தமிழர்கள் உள்ளனர்.
இன்றைய தலைமுறையினருக்கு நினைவு படுத்த மறந்து போன கறுப்பு ஜூலை நிகழ்வானது , வெறுமனே வன்முறைச் செயல்கள் மட்டும் அல்ல; அவை அனைத்து அரச கட்டமைப்புகளிலும் வேரூன்றிப்போய்விட்ட, கட்டுப்பாடற்ற சிங்கள-பௌத்த தேசியவாத எண்ணத்தால் வளர்க்கப்பட்ட கட்டமைக்கப்பட்டதும், உள்நோக்கமுடையவையுமாகும். கலவரம் நடந்த காலப்பகுதியில், அரசாங்கம், சிங்களக் கும்பல்களுக்கு வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தமிழர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவரிகளை வழங்கியதுடன், சிங்களக் கும்பல்களை அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களில் கொழும்பைச் சுற்றிக் கொண்டு சென்றது. வன்முறை தொடங்கி மூன்று நாட்களில், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டதாவது: “அங்கு (வடக்கில்) அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்களோ இவர்கள் (சிங்களவர்கள்) இங்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள்… உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்களவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.” கறுப்பு ஜூலையானது 26 வருட கால ஆயுதப் போரின் அவலத்தை முன்கணித்தது மட்டுமன்றி, அதிகளவான தமிழர்களை அவர்கள் தாயகத்திலிருந்து வெளியேறவும் தூண்டியது. கறுப்பு ஜூலையின் வடுக்கள் மற்றும் அதன் பாரிய அளவிலான தாக்கங்கள் தமிழ் சமூகத்தினூடேயும் அதன் கூட்டு நினைவுகளூடேயும் தொடர்ந்து எதிரொலிக்கின்றது.
கடந்த கால அட்டூழியங்களை நிவர்த்தி செய்து, சமூகங்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர இவ்வாண்டு, அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை முன்மொழிந்தது. கறுப்பு ஜூலை பிரச்சினை நடந்ததிலிருந்து, இதேபோன்ற பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பயனற்றுப்போனத்துடன், பரிகாரம் அல்லது பொறுப்புக்கூறலை வழங்கவில்லை. சுதந்திரமற்ற, பக்கச்சார்புமிக்க, மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்கத் தவறிய இது போன்ற கடந்த கால தோல்வியடைந்த ஆணைக்குழுக்களைக் கருத்திற்கொண்டு, சமீபத்தில் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவை தமிழ் மக்கள் மிகச்சரியாக நிராகரித்துவிட்டனர். இவ்வாறன ஆணைக்குழுக்கள் அரசுக்கு ஆதவரான நிலைப்பட்டினையே எடுக்கும் என்பது உலகறிந்த உண்மை. இவ்வாறன உள்ளூர் ஆணைக்குழுக்கள், 40 வருட கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் அரசின் சதிகளை மீறி தீர்வினை பெற்று தரப்போவதில்லை.
உண்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத, நல்லிணக்கத்திற்கான வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசாங்கத்தை தமிழர்கள் நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. சர்வதேச சமூகம் தமிழர் இனப்படுகொலையை அடையாளப்படுத்தக் கோரும் சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஆதரித்து, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரிப்பதில் பாதிக்கப்பட்ட-உயிர் பிழைத்த சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதோடு, பாரபட்சமற்ற விசாரணைகள் மற்றும் வழக்குகளை உறுதி செய்யக்கூடிய சுதந்திரமான சர்வதேச பொறிமுறைக்கான அவர்களின் கோரிக்கையையையும் ஆதரிக்க வேண்டும். இந்தத் துயர் மற்றும் இழப்புடன்கூடிய வரலாற்றின் மத்தியில், நீதி, பொறுப்புக்கூறல், மற்றும் சுய உறுதிப்பாட்டில் அசைக்க முடியாத முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சக தமிழர்களுடன் பல சமூக நீதி அமைப்புக்கள் போராடுகின்றன. நீதி கிடைக்க வாய்ப்பற்ற மக்களுக்காகவும் இதனை தெரிந்தும் தெரியாதது போல் நடந்து அயல் நாடுகளுக்கும் இதனை அடிக்கடி வலியுறுத்த வேண்டியது அவசியமாகின்றது.