இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர், திருச்சியில் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைதாகியுள்ளனர். இராமநாதபுரம் பகுதியிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கு மர்ம நபா்கள் சிலர், காரில் தங்கம் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (டிஆா்ஐ) அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே முகாமிட்டிருந்த டிஆா்ஐ குழுவினர், அவ்வழியே செல்லும் கார்களை கண்காணித்து, குறிப்பிட்ட கார் வந்ததும் அதை சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் மூன்று பெட்டிகளில் 7,5 கிலோ எடையுள்ள 45 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 4.48 கோடியாகும். இதையடுத்து அற்றை மீட்டு, காரில் வந்த இருவரையும் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.