ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனாவுக்கு இன்றிரவு புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை இந்தப் பயணத்தில் ஈடுபடவுள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீன பிரதமர் லி கியாங் மற்றும் இராஜதந்திரிகள் குழுவை இலங்கை ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.
மேலும், இந்த சீன பயணத்தின் போது, தொழில்நுட்ப மற்றும் விவசாய மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல களப் பயணங்களில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
இதேவேளை, பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவும் திட்டங்கள் உள்ளன. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பல இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த பயணம் மிக முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.