கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதாகத் தெரிவித்ததுடன், ஜனவரியில் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக மீனவதின நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர்மாதம் 21ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம்தொடர்பில் பேசப்பட்டது.
அத்தோடு இந்தச் சந்திப்பில் இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிகளுக்குள் அத்துமீறி வருகைதந்து, எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடிச் செல்கின்ற விடயத்தினையும் முன்வைத்திருந்தேன்.
நாம் கரையில் இருந்து பார்க்கும்போது தெரியக்கூடிய அளவில் வெளிச்சமிட்டவாறு இந்திய இழுவைப் படகுகள் செய்கின்ற அட்டகாசமான செயற்பாடுகளைப் பற்றி அவரிடம் மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அந்தவகையில் இந்திய மீனவர்களால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பில் அவரிடம் மிக விரிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.
இவ்வாறு அவரிடம் இந்த விடயத்தை முன்வைத்து நான் பேசும்போது ஏனைய தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகப் பேசியிருந்தனர்.
இதன்போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதற்குப் பதிலளிக்கும்போது,
இந்த இழுவைப் படகுகள் அத்துமீறி நுழையும் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் ஜனவரியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தாம் வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக இந்த விடயங்களில் நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்திக்கொண்டேயிருக்கின்றோம்.
இதுமாத்திரமின்றி பாராளுமன்றத்தில் பேசக்கிடைக்கின்ற நேரங்களிலும் இந்த விடயம் தொடர்பில் பேசுவோம்.
இந்திய இழுவைப்படகுகள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினைச் சூறையாடுவதற்கு எதிராக இதற்கு முன்னர் எவ்வாறு குரல்கொடுத்துவந்தோமோ அதேபோல் தொடர்ந்தும் இந்த விடயத்தில் குரல்கொடுப்போம்.
அதேபோல் தென்னிலங்கைமீனவர்களின் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவும் தொடர்ந்தும் நாம் குரல்கொடுப்போம்.
இந்த விடயங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடனும் பேசியிருக்கின்றேன்.
குறித்த விடயம் தொடர்பில் கவனம்செலுத்துவதாக கடற்றொழில் அமைச்சரும் உறுதியளித்திருக்கின்றார்.
அதேவேளை இந்த காற்றாலைத் திட்டம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது மன்னாருக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயும்போது, அங்குள்ள மக்கள் கூடுதாலாக இந்த காற்றாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பில் தெரிவித்திருந்தனர். அந்தவிடயம் தொடர்பிலும் பேசியுள்ளோம். காற்றாலைத் திட்டத்தால் மன்னாரில் உள்ள பாதிப்பு நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
அத்தோடு யாழ்ப்பாணத்திற்கும் இந்த காற்றாலைத் திட்டத்தைக் கொண்டுவரப்போவதாகத் தெரிவிக்கின்றனர்.
எனவே யாழ்ப்பாணம் காற்றாலை தொடர்பான விடயங்களையும், மன்னார் காற்றாலை தொடர்பானவிடயங்களையும் உரியவர்கள் விரிவாக எம்மிடம் கையளியுங்கள்.
இதேவேளை மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினையும் காணப்படுகின்றது. முல்லைத்தீவில் மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்த காலத்தில், கொக்கிளாயில் கனியமணல் அகழ்விற்கென மக்களின் காணிகள் சுமார் 44ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன்பிற்பாடு கனியமணல் அகழ்விற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் எமது போராட்டங்களினால் கைவிடப்பட்டிருக்கின்றது.
மேலும் சட்டவிரோத கடற்றொழில்கள் என அரசால் அறிவிக்கப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகள் அனைத்தையும் முற்றாகத் தடைசெய்து, எமது மீனவர்களின் முறையான கடற்றொழில் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும். இந்திய இழுவைப்படகுகளால் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும். இந்த விடயங்களுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடும்போம் – என்றார்.