டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்களை உடனே சஸ்பெண்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை பறந்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனை கடைகள் வாயிலாக மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. பாட்டிலுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 கூடுதலாக வசூகிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பாட்டில்கள் பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரவி வருகிறது. எனினும், டாஸ்மாக் நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வந்தது. இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட போதிலும், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுவிலக்குத் துறைக்கு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் யாரும் 10 ரூபாய் அதிகமாக கேட்கக்கூடாது என அவர் உத்தரவிட்டார். நிலைமை மாறவில்லை: எனினும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா என்ற வழக்கம் இன்னும் மாறவில்லை. அண்மையில் செங்கல்பட்டு பகுதியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குபவர்களை போலீசார் ஒன்றும் கேட்கமாட்டார்கள் என வாடிக்கையாளர் ஒருவர் பேசியதற்கு ஏ எஸ் ஐ ஒருவர் அவரை அடித்து விரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் செய்தியாளர் ஒருவர் பத்து ரூபாய் அதிகமாக விற்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது விற்பனையாளர் முருகன் பாட்டில் உடைவது, இறக்குவதற்கு கூலி போன்றவற்றிற்கு யார் காசு கொடுப்பது எனக் கூறி செய்தியாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாஸ்மாக் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக காவல்துறையினர் தாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் மது குடிப்பதற்கு பாதுகாப்பு கொடுத்த தமிழ்நாடு அரசு தற்போது மதுபான விலையை கள்ளத்தனமாக உயர்த்தி விற்பனை செய்யப்படுவது தொடர்பாக புகார் தெரிவித்தவரை காவல்துறையை கொண்டு தாக்குவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால், துறை அதிகாரிகளுக்கும், மேலிடத்திற்கும் கமிஷன் செல்வதாகவும் அரசியல் கட்சிகள் பலவும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் அனுப்பிய சுற்றறிக்கையில், மதுக்கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் மற்றும் அதற்கும் மேல் விற்பனை செய்கின்ற கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தவறுகளுக்கு தாங்களும் பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.