திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் – குகதாசன் எம்.பி நேற்று வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இலங்கைத் துறைமுக அதிகார சபையானது திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 5,226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவிக்க வேண்டு மென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் வலியுறுத்தினார்
திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் மாகாண மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் வரும் முதன்மையான வீதிகள் உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. எனவே இதனை மறுசீரமைக்க வேண்டும்.திருகோணமலை மாவட்டத்தில் பாலங்களும் பழுதடைந்துள்ளன. இவை நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் கட்டைபறிச்சான் பாலம் ( கருப்பு பாலம் ) மற்றும் இறால் பாலம் என்பன முழுமையாகச் சேதமடைந்து காணப்படுகின்றன . இவற்றைச் சீரமைக்காவிட்டால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றைப் புதிதாக அமைக்க வேண்டும்.
அதேபோன்று வெருகல் பிரதேசத்தில், ஏரிக்கும் கடலுக்கும் இடையில் சுமார் 5000 மக்கள் வாழ்கின்றனர். பேரிடர் காலங்களில், மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி மரணத்தை சந்திக்கக் கூடிய வாய்ப்பு உண்டு . இவ்வாறான விளைவுகளைத் தடுக்க ஏரியின் மீது பாலம் அமைக்க வேண்டும்.திருகோணமலை , முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையில் கொக்கிளாய் ஏரி உள்ளது.
இது ஒர் ஆழமற்ற ஏரி . புல்மோட்டையில் வாழும் மக்கள் கொக்கிளாய் ஏரி வழியாக 32 கிலோமீட்டர் பயணித்தால் முல்லைத்தீவை சென்றடையலாம். பாலம் இல்லாததால் மக்கள் வவுனியா வரை சுற்றிச் சென்று 75 கிலோமீற்றர் அதிகமாக பயணித்து முல்லைத்தீவுக்கு செல்ல வேண்டியுள்ளது. இது பணச் செலவையும் நேரச் செலவையும் ஏற்படுத்துகிறது. எனவே கொக்கிளாய் ஏரியின் மீது பாலம் அமைக்க வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தின் முதன்மையான வளமாக காணப்படுவது அதன் இயற்கை துறைமுகம். ஆனால் சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் பெரிய அக்கறை காட்டவில்லை.திருகோணமலை துறைமுகத்தின் உள்ளே 4 இறங்கு துறைகள் உள்ளன . அவற்றில் ஒன்று அஷ்ரப் இறங்கு துறை.இது இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எஞ்சிய மூன்று இறங்கு துறைகளில் ஒன்று பிறிமா மா ஆலையும் மற்றொன்றை டோக்கியோ சீமேந்து ஆலையும் பிறிதொன்றை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் பயன்படுத்துகின்றன.
அஸ்ரப் இறங்கு துறையில் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளுடன் மாத்திரம் இன்று வரை ஆளணி பற்றாக்குறை , போதிய கப்பல் தரிப்பிட வசதியின்மை போதிய சரக்கு களஞ்சிய வசதியின்மை சரக்கு ஏற்றி இறக்கும் கனரக இயந்திரங்கள் இன்மை, முறையான வாகன ஓடுதளம் இன்மை குறைபாடுகளோடு காணப்படுகின்றது.இதன் காரணமாக இங்கு வரவேண்டிய கடற் கலங்களுக்கு சிறந்த சேவை கிடைப்பதில்லை.
இதனால் அவை வேறு துறைமுகங்களை நாடிச் செல்கின்றன. இதன் விளைவாக நமக்கு பாரிய வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. துறைமுகத்தில் உள்ள குறைபாடுகளை சீர் செய்வதன் மூலம் கணிசமான அந்நிய நாணயமாற்று வருவாய் ஈட்ட முடியும். மூன்று நிறுவனங்கள் பயன்படுத்தும் மூன்று இறங்கு துறைகளையும் இலங்கைத் துறைமுக அதிகார சபையே நிருவகித்தால் கூடுதல் வருவாயினை நாட்டுக்கு ஈட்ட முடியும் என்பதோடு வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும்.
துறைமுகத்தை அண்டியுள்ள எண்ணெய்க் குதங்களில் பத்து வீதத்துக்கும் குறைவானவையே பயன்பாட்டில் உள்ளன. ஏனையவற்றையும் பயன் பாட்டுக்கு கொண்டு வந்தால்இ இந்துமா கடலில் பயணம் செய்கின்ற கடற் கலங்களுக்கு எரிபொருள் வழங்கி பெருமளவு அந்நிய நாணய மாற்றினை ஈட்டுவதோடு வேலை வாய்ப்பினையும் வழங்கலாம்.
இலங்கைத் துறைமுக அதிகார சபையானது பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும் 5226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். எனவே துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவித்து அதில் வாழும் மக்களுக்கு வழங்க வேண்டும்.
இ.போ. சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்திற்கு 37 பஸ் கள் தேவை. எனினும் 20 பஸ்கள் மட்டுமே அதனிடம் உள்ளன. இதனால் இ. போ.சபையானது சிறந்த சேவையை வழங்க முடியாதுள்ளது. எனவே பழுதுபட்டு கிடக்கின்ற பஸ்களை திருத்த வேண்டும். குறைந்தது பத்து புதிய பஸ்களை திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்க வேண்டும்.
அத்தோடு இ. போ.சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் காணப்படும் 50சதவீதமான ஆளணி பற்றாக்குறை நிரப்ப வேண்டும்.மேலும் இ.போ.சபையின் திருகோணமலை மாவட்ட தரிப்பிட உள்ளக ஓடுதளம் மிக மோசமாக பழுதடைந்துள்ளது இதை மறுசீரமைக்க வேண்டும்.திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு நேரடியாக புறப்படும் புகையிரதம் சேவை அண்மையில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை மீள தொடங்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ளார்.