நேற்று திங்கட்கிழமை (08) வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று கரையொதுக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன், உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு, மிதவை உள்ளிட்டவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் -, வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வத்தை வடிவான 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட இனம்தெரியாத மிதவைக்கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது. கரையொதுங்கிய குறித்த கலம் தொடர்பில் பொலிசார் மற்றும் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரையிலும் மிதவை ஒன்று கரையொதுங்கி பரபரப்பை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பொருளில் Asia 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏதாவது கப்பலில் இருந்து குறித்த பொருள் தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென பொலிஸாரினால் சந்தேகிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில், ஆகிய பகுதிகளில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றது.