அன்னபூரணியின் அமெரிக்கப் பயணம் – இன்றுடன் 86 வருடங்கள் – 01 ஓகஸ்ட் 1938
Voyage To America Of Valvai Schooner- எனது தந்தையரின் தனது 25 வது வயதில் எழுதிய முதலாவது நூல்
வல்வெட்டித்துறையிலிருந்து , 1930ஆம் ஆண்டில், சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரிலான இரட்டைப் பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.
1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கரான பிரபல கடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவர் அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும், வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சத அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் (Boston, USA) துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்றது.
சூயெஸ் கால்வாயினூடாக மத்திய தரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும் பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) Boston துறைமுகத்தில் நிறைவடைந்தது.
இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணியின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்களின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.
கப்பலை வாங்கிய அமெரிக்கரான “Florence C. Robinson” என்பவர் பின்னர் இதன் மாதிரியைக்கொண்டு பல கப்பல்களை உருவாக்கினார். அதுமட்டுமல்லாது இது இக் கப்பல் தொடர்பான இரு நூல்களையும் வெளியிட்டிருந்தார்.
அமெரிக்க மற்றும் ஸ்ரீலங்கா படையினர் இணைந்து நடத்திய ‘ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்’ நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணி அம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
86 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் நுட்பத் திறனும், அறிவியல் நுட்பங்களும் விருத்தியடைந்திராத காலத்தில் உள்ளூர் வேப்ப மரங்களை கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள் அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்மா, காக்கிநாடா, தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தார்கள்.
இந்த அட்டைப்படம் Voyage To America Of Valvai Schooner – வல்வை கப்பலின் அமெரிக்க பயணம் என்ற முதலாவது நூல் எனது தந்தையாரினால் அவரது 25 வது வயதில் ஆங்கிலத்திலும் தமிழிலும்,1974 ஆம் ஆண்டு உலக தமிழராட்சி மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கையளிப்பதற்காக அப்பாவினால் எழுதி வல்வை சனசமூக நிலையத்தினால் வெளியிடப்பட்டது.
அவரது முயற்சிகள் எனக்குள் உத்வேகத்தை கொடுத்து 2010 ஆம் ஆண்டு, அன்னபூரணி கப்பல் தரை இறங்கிய இடமான குளோசெஸ்ரர் (Gloucester) Boston துறைமுகத்திற்கு சென்று மேலும் பல கப்பல் தொடர்பாகவும் Florence C. Robinson பற்றியும் பல தகவல்களை தெரிந்து கொள்ள உதவியது.
அது தொடர்பாக மேலும் தொடரும் …..
– நவஜீவன் ஆனந்தராஜ்