எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வதெனில் பூமியிலிருந்து புறப்படுவதை விட, நிலவிலிருந்து போவதுதான் எளிது என விஞ்ஞானிக ள் கணித்திருக்கிறார்கள். நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை சந்திரயான் 1 கண்டுபிடித்த பின்னர் நிலவை ஆக்கிரமிப்பதற்கான போட்டி உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏனெனில் நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து அதனை எரிபொருளாகக் கொண்டு இலகுவாக செவ்வாய்க் கிரகத்துக்கு போய்விடலாம். எனவேதான் இந்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவும் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்தத் தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 17 ஆம் திகதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது எதிர்வரும் 23 ஆம் திகதி நிலவில் தரை இறங்க இருக்கிறது. எனவே படிப்படியாக அதன் தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது. இதனையடுத்து நாளைமறுதினம் 23 ஆம் திகதியன்று மாலை நிலவில் இந்த லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில், தரையிறங்கும் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்த பின்னர் அதன் தூரம் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவது மட்டுமே மிகுதியாக இருக்கிறது. நாளைமறுதினம் 23 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் மெதுவாக தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
அதாவது 23 ஆம் திகதி மாலை 5.45க்கு பதிலாக 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவை தொடும். இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை பத்திரமாக தரையிறக்கியுள்ளன. அப்படி இருக்கையில், இந்தியா இந்த மிஷனில் வெற்றி பெற்றால் உலக அளவில் அது பெரும் சாதனையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.