ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
உண்மையான இடதுசாரி தலைவராகத் திகழ்ந்த ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் இலங்கை மக்களிடம் பொதுவுடமை தத்துவத்தை விதைத்த பெருமைக்குரியவர்.
சிங்கள இனவெறியர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வாழ்நாள் முழுதும் தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்து துணைநின்றவர். 2009ஆம் ஆண்டு தமிழினப்படுகொலைக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் ஆதரவு நாடகத்தை அரங்கேற்ற சென்னையில் திமுக நடத்திய டெசோ கூட்டத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள், அந்த கூட்டத்திலேயே இலங்கையும் இந்தியாவும் இணைந்தே தமிழினப் படுகொலைப்போரைச் செய்தது என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி, அதன் காரணமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களால் இடைமறித்து பேசவிடாமல் தடுக்கப்பட்டார்.
அத்தகைய தீரமிக்க அரசியல் போராளியின் மறைவு சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாது; தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி