Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஏனையவை சிறுகதை

சாதி!

Stills by Stills
15/07/2023
in சிறுகதை
0
சாதி!
0
SHARES
9
VIEWS
ShareTweetShareShareShareShare

அந்த ஒத்தையடிப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது.

ஆற்றில் தண்ணீர் `சலசல’ வென ஓடிக்கொண்டிருந்தது. இருபுறமும் ஆளை மறைக்கும் நாணல்கள். பெரு வெள்ளத்தின்போது மலையிலிருந்து அடித்து வரப்பட்ட பெயர் தெரியாத மரத்தின் விதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து விண்ணை முட்டிக்கொண்டு நின்றது. சின்னக் கருத்தப்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் வழியில், ஊருக்கு சற்று வெளியே ரோட்டிலிருந்து ஆற்றுக்குப் பிரிந்து செல்லும் ஒத்தயடிப் பாதையில் ரஞ்சன் நடந்துகொண்டிருந்தான். அரசு விடுதியில் தங்கி, கல்லூரியில் படிக்கும் அவன் விடுமுறை நாளில் ஊருக்கு வரும்போது, வீட்டில் இருப்பதைவிட அந்தப் பெரிய மரத்தின் தெற்குப் பக்க வேர் பகுதியில்தான் அதிகம் இருப்பான். ஐந்து ஆட்கள் ஒன்றாக சேர்ந்து நின்றால் மட்டுமே கட்டிப்பிடிக்க முடிகிற மிகப்பெரிய மரம் அது.

ரஞ்சனுக்கு அந்த மரத்தின் நிழலில்தான் கேள்விகள் எழும். பதில்களை அவனின் அதிக நியூரான் அடர்த்தி உள்ள ஒன்னேகால் கிலோ ஐன்ஸ்டீன் மூளை அலசி ஆராயும். அந்த வகையில் இந்த மரம் அவனுக்குப் புத்தனின் போதி மரம் மாதிரி தான்.

அவ்வப்போது திரும்பி அந்த ஒத்தையடிப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது. “நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்” பாடல் விசிலாக அவனிடத்தில் வெளிப்பட்டது. சற்று நேரம் காத்திருந்தவன், நியூட்டன், ஆல்வா எடிசனையெல்லாம் மறந்து சற்று கோபமானான். இனி வீட்டுக்குப் போகலாம் என்று எழும்பி பேன்டின் பின்பக்கத்தை இரண்டு கைகளாலும் தட்டி தூசியை உதறினான். திரும்பி ஒத்தையடிப் பாதையில் நடக்கையில் மரத்தின் பின்புறத்தில் இருந்து அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்டது.

“ஹா.. ஹா… ஹா …”

இது மகிமாவின் சத்தம்தான். அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.

“ஊசி மணி பாசியோவ் …

எங்கிருக்காவியோவ் …..

ஊசி மணி பாசியோவ் …” இயல்பாய் வந்தது அவனுக்கு.

“கண்ணான கண்ணனுக்கு அவசரமோ…..” எதிர் பாட்டுப் பாடினாள் மகிமா

ரஞ்சன் மரத்தின் பின்பக்கம் ஓடினான்.

“செல்லக் குட்டி, எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா?”

“தெரியுமே”

“அப்போ, முன்னாடியே வந்துட்டியா?”

“ம்ம்ம். நீ என்ன செய்யிறானு பாத்துக்கிட்டே இருந்தேன்….. உன்னை பாத்துகிட்டே இருக்கணும்போல இருக்கு ரஞ்சன்”

ரஞ்சன் அவளை கட்டிக்கொண்டான்.

“எங்க அப்பாவ நினைச்சாதான் பயமாயிருக்கு’

அவள் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“கண்டிப்பா என் மாமனார், உன்னை எனக்கு கட்டித் தரமாட்டார். நீ பெரிய இடம்….. என் சாதி வேற”

அவள் அவன் வாயைப் பொத்தினாள்.

அவன் கையை விலக்கினான்.

“உண்மை அது தானே?”

`அப்போ என்னைக் கல்யாணம் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா?’ விசும்பல் அவளிடம் வெளிப்பட்டது

“ஏய்… மகிகுட்டி…. பயந்துட்டியா? நீ இல்லாம நான் மட்டும் உயிரோடு இருந்துடுவேனா?”

`அப்படினா இப்பவே இந்த ஊரை விட்டுப் போய்விடுவோம்’

“இன்னும் ஒரு 6 மாசம்தான். என் அம்மா ஆசைப்படி, மாஸ்டர் டிகிரி முடிச்சிடுவேன். நீயும் UG முடிச்சிருவே. அதுக்கப்புறம் அம்மாவோட சேர்ந்து நாம மூணு பேரும் வெளியூருக்குப் போய் சந்தோஷமா வாழலாம், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க”

கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள், தூரத்தில் தனக்காகக் காத்து நின்ற தோழியைக் கை காட்டி அழைத்தாள்.

“சரி, நான் கிளம்புறேன்” என்ற ரஞ்சன் ரோட்டுக்கு நடந்தான்.

மகிமாவும் ரம்யாவும் குடத்தில் தண்ணீரை நிரப்பி, இடுப்பில் சுமந்துகொண்டு வீட்டுக்குவந்தனர்.

படிப்பு முடிந்து ரஞ்சன் ஊருக்கு வந்திருந்தான். மறுநாள் மகிமா, ரஞ்சன் மற்றும் ரஞ்சனின் அம்மா மூவரும் வெளியூர் செல்வதாய் ஏற்பாடு. மாலை 4 மணிக்கு ஆற்றங்கரைக்கு மகிமாவை வரச்சொல்லியிருந்தான்.

“அப்பா, நான் தண்ணி எடுத்துட்டு வரேன் ” என்றவள் வாசல் கதவின் நிலைக்கு மேலே சுவரில் மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தாள். பிளாஸ்டிக் மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கருகமணி செயினுடன் மங்களகரமாக அம்மா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். தொட்டுக் கும்பிட்டாள்.

`சரிம்மா’ என்ற ராகவன் அதைப் பார்த்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒண்ணும் தெரியாததுபோல் முன் ஹாலில் கட்டிலில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பாதியாக மூடியிருந்த கீழ் கதவைத் திறந்துகொண்டு தெருவில் நடந்தாள்.

`உள்ளம் கொள்ளைப் போகுதே ‘ பாடல் அவள் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது.

அந்தப் பெரிய மரம்தான். அதை நெருங்கிவிட்டாள். அதை நெருங்க நெருங்க, நெஞ்சம் படபடத்தது. ஆர்வம், சந்தோஷம் என்று அவள் மனதில் பல ரசங்களின் கலவை கூத்தாடியது.

“ரஞ்சன்….”

பதில் இல்லை

“ரஞ்சன்…. நான் மகிமா வந்துட்டேன்”

மரத்தின் இலைகள் காற்றில் அசைவதைப் பார்க்க உள்ளத்தில் முதல்முறையாக பயம் எட்டிப்பார்த்தது. மரத்தைச் சுற்றி தெற்குப்பக்கத்துக்கு வந்தாள். யாரையும் காணோம்.

“ரஞ்சன்… ரஞ்சன்….. அம்மா….”

`ஏன் இன்னும் வரவில்லை? ஏதும் பிரச்னையா?’ அவள் மனதில் பல கேள்விகள். அப்படியே ரஞ்சன் உட்காரும் இடத்தில் அமர்ந்தாள்.

சூரியன் மேற்கு வானில் மெல்ல மறைந்துகொண்டிருந்தான்.

குடத்தில் தண்ணீர் நிரப்ப மறந்துபோய் அப்படியே வீட்டுக்குத் திரும்பினாள்.

அப்பா இன்னமும் டிவிதான் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு சாப்பாடு போட்டுக் கொடுத்தாள்.

“என்னம்மா, முகம் ஏதோ மாதிரி இருக்கு. உடம்பு ஏதும் சரியில்லையா?”

“இல்லப்பா”

“நீயும் சாப்பிடேன்மா”

“கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுறேன்பா’ சுஜாதாவின் நாவலை கையில் எடுத்துக்கொண்டு நடு ஹாலில் ஈஸி சேரில் உட்கார்ந்தாள். கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் மனம் முழுவதும் ரஞ்சனே நிறைந்திருந்தான். “ஏன் வரவில்லை” என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவள் மனது அவளை கேட்டுக்கொண்டிருந்தது. அப்படியே தூங்கிப் போனாள்.

காலையில் முதல் வேலையாக தோழி ரம்யாவைப் போய்ப் பார்த்தாள்.

“ரஞ்சனைப் போய் பார்த்துட்டு வர்றியா. ப்ளீஸ்” என்றாள் மகிமா.

“நேத்து மத்தியானமே அவரும் அவர் அம்மாவும் சென்னை போயிட்டாங்களே. உனக்குத் தெரியும்னுதான் நான் நினைத்தேன். அது இருக்கட்டும், ஊர்த்தலைவர் மகள் விஷயம் தெரியுமா உனக்கு” என்றாள் ரம்யா.

கேட்க விருப்பம் இல்லாதவளாய் வீட்டுக்குத் திரும்பியவள் நடை பிணமானாள். அன்றைக்கே ராகவன் கீழே விழுந்து காலின் கரண்டை நரம்பில் அடிபட்டு படுக்கையிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்க ஆரம்பித்தார். திருமணம் பற்றிய பேச்சை எடுக்கும்போதெல்லாம் வேண்டாம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தாள். மனதுக்குள் அழுது அழுது ராகவன் நொந்து நூலாகிப் போனார்.

ஒவ்வொரு நாளும் ரஞ்சனிடமிருந்து ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து 10 வருடங்கள் கடந்துவிட்டன. அப்பாவுக்கும் மகளுக்கும் அந்த வீடே சிறையானது. வெளியுலகம் பிடிக்கவேயில்ல. ராகவனின் மனதில் மட்டும் ஏதோ ஒன்று கட்டை மாதிரி உள்ளத்தை அழுத்திக்கொண்டே இருக்கிறது. மகளிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார். முன் ஹாலின் கட்டிலே அவருக்கு எல்லாமுமாகிப் போனது.

“உனக்கு விஷயமே தெரியாதா? அவங்கெல்லாம் இப்போ வெளிய வர்றதே குறைவுதான்” என்ற ரவி, அனைத்தையும் சொல்லி முடித்தான். காபி டம்ளர் காலியாகியிருந்தது.

ரஞ்சன் பில்லுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு ரவியின் வாட்ஸ்அப் நம்பரை பரிமாறிக்கொண்டான்.

வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சன் அம்மாவிடம் மருந்து பாட்டிலைத் தந்தான்.

“அம்மா….. நான் ஊருக்குப் போயிட்டு வரேம்மா ” பேக்குக்குள் துணிகளை அடைக்க ஆரம்பித்தான்.

அம்மா பதறினாள்.

`நடந்ததை எல்லாம் மறந்துட்டியா’ பதற்றம் அவள் குரலில் தெரிந்தது

இப்போ எல்லாமே மாறிப் போச்சு. ரவி சொன்னவற்றையெல்லாம் அம்மாவிடம் கூறினான்.

“சரி…” என்று அரைகுறையாய் சம்மதித்தாள்.

கோயம்பேட்டில் பஸ் ஏறி மறுநாள் அதிகாலையிலேயே திருநெல்வேலி வந்தடைந்தான். பேருந்து நிலையத்திலிருந்த பாத்ரூமில் குளித்து உடை மாற்றி அங்கிருந்த கிளாக் ரூமில் தன் பேக்கை வைத்து ரசீது பெற்றுக்கொண்டான். முன்புறம் இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்டுக்கு வந்தவன், “சின்னக் கருத்தப்பட்டிக்கு போகணும்” என்றான்.

ஆட்டோ ஊரை நெருங்கும் வேளையில் வலதுபுறத்தில் அந்த ஒற்றையடிப் பாதையை பார்த்தான்.

“நிறுத்துங்க……. நிறுத்துங்க… இங்கேயே இறங்கிக்கறேன்”

ஆட்டோ ரோட்டில் ஒரு `U’ டர்ன் அடித்து ஒதுங்கி நின்றது.

பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தவன், மெதுவாக அந்த ஒத்தையடிப் பாதையில் இறங்கி நடந்தான். மனம் ஏனோ கனத்தது. அந்தப் பெரிய மரம் அப்படியே இருந்தது. ஓடிப்போய் அதைக் கட்டிக்கொண்டான். கண்களில் கண்ணீர். மெதுவாக அதைத் தடவினான். முத்தம் கொடுத்தான். சத்தமாக அழுதான். அவனின் அழுகை மரத்துக்கும் கேட்டிருக்க வேண்டும். காற்றில் தன் இலைகளை உதிர்த்து அவனுக்கு ஆறுதல் கூறியது. தெற்குப் பக்கத்துக்கு வந்தான். அவன் இருக்கும் இடத்தில் ஆட்டுப் புழுக்கைகள் கிடந்தன. முந்தின நாள் ஆடுகள் அங்கே இருந்திருக்க வேண்டும்.

தன் கையால் அவைகளை ஒதுக்கி மெதுவாக உட்கார்ந்தான். பழைய நினைவுகள் ஆற்றின் நீரோட்டத்துக்கு இணையாய் மனதில் பசுமையாய் ஓடிக்கொண்டிருந்தன.

“யாருப்பா அது?”

திடுக்கிட்டு எழுந்தவன் சத்தம் வந்த திசையில் பார்த்தான். ஆடு மேய்க்கும் பெரியவர் கையில் நெம்புகோலுடன் நின்றுகொண்டிருந்தார்.

ஆபீஸர் தோரணையில் இருந்த அவனைப் பார்த்ததும் பெரியவர் சற்று பயந்துதான் போனார்.

“நேத்திலிருந்து ஒரு ஆட்டைக் காணோம் அதான், தேடிட்டு இருக்கேன் ” என்றார் அவனைப்பார்த்து.

பதில் சொல்லாமல் அங்கிருந்து ஊரை நோக்கி நடந்தான் மகிமாவைத் தேடி.

பத்து வருடத்தில் ஊர் ரொம்பவே மாறியிருந்தது. அவனின் வீடு இடிந்து கிடந்தது. தெரு முனையில் இருந்த பெட்டிக்கடை சூப்பர் மார்க்கெட்டாக மாறியிருந்தது. கடையின் வெளியே, மேலே பல வண்ணங்களில் வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் குடங்கள் பாசிமாலையை நினைவுபடுத்தியது. வேகமாக நடந்து நேராக மூன்றாவது தெருவுக்கு வந்தான். அந்த அஞ்சாவது வீடுதான். மெதுவாக வாசற்படி ஏறினான். கால்கள் தடுமாறியது. கதவை பிடித்துக்கொண்டான். அரைக்கதவு மட்டும் சாத்தியிருந்தது.

“ஐ….யா …. ஐ…..யா” ரஞ்சனின் குரலில் நடுக்கம் தெரிந்தது.

“ஐயா …….” மீண்டும் கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட்டான்.

கதவுக்கு இடது பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த ராகவன் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தார். பக்கவாட்டில் திரும்பி வாசலைப் பார்த்தவர்,

“யாரு?”

“நான்…… வந்து…… நான்……”

கண்களை சுருக்கி கண்ணாடியை சரிசெய்த ராகவன், அவனைப் பார்த்தார்.

`ர…ஞ்….ச…ன், ரஞ்….சன், ரஞ்சன்…..’

“ஆமாய்யா”

கட்டிலில் இருந்துகொண்டே கதவைத் திறக்க முயன்றார். முடியவில்லை.

“உள்ள வாப்பா” அவர் முகத்தில் பத்து வருஷத்திற்குப் பிறகு சந்தோஷம் எட்டிப் பார்த்தது.

செருப்பை கழற்றிய ரஞ்சனைப் பார்த்து

“செருப்பை போட்டுகிட்டு வாப்பா”

அருகில் வந்தான்.

அவன் கையைப் பிடித்து அவனைக் கட்டிலில் உட்கார வைத்தார்.

“எப்படிப்பா இருக்கே?”

ராகவன், ரஞ்சனின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டார்.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

`இருக்கேன், இருக்கேன்’ விரக்தி அவர் பேச்சில் தெரிந்தது.

எதையோ நினைத்தவராக,

“உனக்கு எத்தனை பிள்ளைங்க?”

“நான் இன்னும் கல்யாணம் கட்டலைங்கய்யா….”

ராகவனின் முகத்தில் சந்தோஷம் ஊற்றெடுத்தது.தன் வலது கையால் அவன் தலையைக் கோதினார். அப்படியே அவனின் முதுகைத் தடவிக்கொடுத்தார். சந்தோஷம் அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீராய் பெருகியது. தன் நடுங்கும் கரங்களால் அவனின் கன்னங்களை வருடினார். குனிந்து அவனின் கால்களில் உள்ள செருப்பைக் கழற்ற முற்பட்டார். அவசரமாக காலை கட்டிலின் உட்பக்கமாய் இழுத்தவன் அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டான். அவனின் கண்ணீர் அவரின் கையை நனைத்தது. ராகவனுக்கு நினைவுகள் பின்னோக்கிப் போனது.

“நீ என் கையைப் பிடிக்கிறியா, நீ மாற்று சாதியைச் சேர்ந்தவன்.. !”, ரஞ்சனை தன் இடது கையால் தள்ளிய ராகவன், காலால் எட்டி உதைத்தார். அந்தப் பெரிய மரத்தில் மோதி கீழே விழுந்தான் ரஞ்சன்.

“உனக்கு என் பொண்ணு கேட்குதா, உன்னை உயிரோட விட்டாதானே இந்த மாதிரி ஆசையெல்லாம் மனசுல வரும்” என்றவர், அருகில் நின்ற ஊர்த் தலைவரைப் பார்த்தார். முதுகுக்குப் பின் மறைத்து வைத்திருந்த அரிவாளை ராகவனிடம் கொடுத்தார் ஊர்த்தலைவர்.

`ஆட்கள் யாரும் வர்றதுக்குள்ள சீக்கிரம் காரியத்தை முடிச்சுடு ராகவா, இவனை மாதிரி பயலுகளை வளர விட்டா நம்ம வீட்டுப் பெண்களுக்குத்தான் கெட்டப்பேரு. அப்புறம் நமக்கு சரிசமமா நம்ம வீட்டுள்ள நம்ம பக்கத்துலேயே உட்கார்ந்திருவானுக… ம்ம்ம் சீக்கிரம்’ ஊர்த்தலைவர் சொல்ல, ஆளில்லாத அந்த ஆத்தங்கரையில் ராகவன், ரஞ்சனை நோக்கி அரிவாளுடன் ஓடினார்.

“தலைவர் ஐயா, சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, சின்னம்மாவைக் காணோம்” ஊர்த்தலைவரின் வேலைக்காரன் ரோட்டிலிருந்து கத்தினான். அந்தச் சத்தம் கேட்டு ராகவனும் திரும்ப ரஞ்சன் நாணல்களுக்குள் மறைந்துபோனான்.

வீட்டுக்கு வந்தனர் இருவரும்.

ராகவன், நீ உன் வீட்டுக்குப் போ. நான் அப்புறம் பேசுறேன் என்ற ஊர்த்தலைவர், வீட்டுக்குள் நுழைந்தார்.

அடுத்தநாள் காலையிலேயே ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது ஊர்த்தலைவர் மகள் பக்கத்துக் காலனி பையனுடன் ஓடிவிட்டாள் என்று. விஷயம் கேள்விப்பட்ட ராகவன், வேகமாக ஊர்த்தலைவர் வீட்டுக்குள் நுழைந்தார். ஊர்த்தலைவர் நாற்காலியில் சோகமாய் அமர்ந்திருக்க, அவரின் மனைவி அருகில் தரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.

“தலைவரே, நாம ஊரே திரண்டுபோய் அவனை வெட்டிப் போடுவோம்” என்றார் ராகவன்.

`வேண்டாம் ராகவன்’

“ஏன் தலைவரே. அந்த கீழ் சாதிக்கார பயலுவளை சும்மா விடக்கூடாது” ராகவனின் பேச்சில் கோபம் கொப்பளித்தது.

`இனி ஒரு பயனும் இல்ல. என் மகள், அவ விரும்பித்தானே அவன் கூடப் போனா. அவ ஆசைப்படி அவன் கூடவே வாழட்டும். நீ இதை இப்படியே விட்டுடு’

ராகவனுக்கு `சுருக்’ என்றது. வெளியே வந்தார். தன் வீட்டுக்கு வரும் வழியில் அவருக்குள் பல கேள்விகள். அவர் மகளுக்கு ஒரு நியாயம், என் மகளுக்கு ஒரு நியாயமா? இவருக்காகத்தானே நானும் சாதியைத் தூக்கிப் பிடித்தேன். என் மகள் வாழ்க்கையையே பாழாக்கி விட்டேனே. துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சு வலித்தது. நெஞ்சை இடது கையால் பிடித்துக்கொண்டே தரையில் உட்காரப் போனவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஒரு பெரிய கல் காலின்

கரண்டையை பதம் பார்த்தது. அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்தவர், நொண்டிக்கொண்டே வீட்டுக்கு வந்தார். அதற்குப்பின் அந்த கட்டிலே அவருக்கு எல்லாமுமானது.

“அப்பா …” உள்ளே இருந்து குரல் கேட்டு ராகவன் இயல்பு நிலைக்கு வந்தார். அவனின் கைகளைப் பற்றிக்கொண்டார்.

“இங்க வாம்மா”

வேகமாக முன் வீட்டுக்கு வந்தவள் கண்களில் இனம் காணமுடியாத அதிர்ச்சி. உடனே உள்ளே சென்றுவிட்டாள்.

ராகவன், ரஞ்சனின் கைகளை விடுவித்தார். அவரின் கண்கள் சொல்வது ரஞ்சனுக்குப் புரிந்தது. உள்ளே சென்றான். ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள். ராகவன், தன் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

“மாப்பிள்ளைக்கு சாப்பாடு குடுமா” என்றவர், சுவர் பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டார்.

நன்றி –ஜே.ஞா

ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ஏக்கம்!

அடுத்த செய்தி

காதல் ……

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தீபாவளி சிறுகதை:”பொத்தக் கால்சட்டை” – இயக்குநர் வ.கௌதமன்

தீபாவளி சிறுகதை:”பொத்தக் கால்சட்டை” – இயக்குநர் வ.கௌதமன்
by Stills
12/11/2023
0

பொத்தக் கால்சட்டை தீபாவளி சிறுகதை இயக்குநர் வ.கௌதமன் நடந்து முடிந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தால், காலம் பலவிதமான சோதனைகளை ஒரு விளையாட்டாக நடத்திவிட்டுத்தான் சென்றிருக்ன்கிறது நம்மைவிட்டு....

மேலும்...

ஏக்கம்!

ஏக்கம்!
by Stills
15/07/2023
0

சுகந்தி கல்லூரி படிப்பு முடித்ததும், பேங்க்கில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு அவருக்கு திருமணம் செய்துவைத்தான் குமார். `கொக்கரக்கோ..... கோ' காலைச் சூரியன் தன் கதிர்களால் புதுப்பட்டியை...

மேலும்...

சலூன் கடை!

சலூன் கடை!
by Stills
15/07/2023
0

இப்போது ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படம் அவரை ரொம்ப சுவாரஸ்யமாக்கியது. பத்து நாள்கள் தொடர்ந்து வேலை வேலை என்று ஓடியதால் தாடியும் மீசையும் தாறுமாறாக...

மேலும்...

விடுபடுதல்!

விடுபடுதல்!
by Stills
15/07/2023
0

அஸ்வின் Tidel Park க்கில் நைட் ஷிப்ட்டில் வேலை செய்கிறான். சமீபத்தில்தான் Team Lead ஆக பதவி உயர்வு கிடைத்திருந்தது. இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது....

மேலும்...

அட்டைக் காசும், அவ்வூர் வாத்தியார் மகனும்!

அட்டைக் காசும், அவ்வூர் வாத்தியார் மகனும்!
by Stills
15/07/2023
0

தாத்தா. ஓரணாவுக்குக் கடலை மிட்டாயும், ஓரணாவுக்குப் பொட்டுக் கடலையும் கொடுங்க'' என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். அந்தச் சிற்றூரில் தர்மலிங்கம் கடைதான் அப்பொழுது பிரசித்தம். சிறிய கடைதான்...

மேலும்...
அடுத்த செய்தி
காதல் ……

காதல் ......

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.